ops campaign

ஜெயலலிதாவின் மரணத்துக்கு காரணமானவர்களை ஆட்சியிலிருந்து அப்புறப்படுத்தி , அவர் விரும்பிய புதிய ஆட்சி மீண்டும் மலரும் என முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் உறுதிபடத்தெரிவித்தார்.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் ஓபிஎஸ் அணி வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து ஓபிஎஸ் பழைய வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை பகுதிகளில் உள்ள ஏகப்பன் தெரு, முனியப்பன் தெரு, கருமாரியம்மன் தெரு, தங்கவேல் பிள்ளை தெரு, மதுரை முத்து தெரு, மண்ணப்பன் தெரு, சாய்பாபா கோவில் தெரு உள்பட்ட இடங்களில் திறந்தவெளி ஜீப்பில் சென்று வாக்குகள் சேகரித்தார்.

அப்போது பேசிய அவர், ஒரு குடும்பத்தின் பிடியில், கட்சியும், ஆட்சியும் சென்றுவிடக்கூடாது என்ற நோக்கத்துக்காக அதிமுகவை எம்.ஜி.ஆர். உருவாக்கினார். அதே கொள்கை கோட்பாடோடு ஜெயலலிதா, ஒன்றரைக் கோடி தொண்டர்களுடன் யாராலும் அசைக்க முடியாத இரும்பு கோட்டையாக மாற்றி காட்டினார்.

ஆனால், தற்போது ஒரு குடும்பத்தின் பிடியில் கட்சியும், ஆட்சியும் சிக்கியுள்ளது. ஜெயலலிதா யாரை விரட்டினாரோ? அவரே வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார் என குறிப்பிட்டார்.

டி.டி.வி.தினகரன் தரப்பினர் தலையில் பணமூட்டையை சுமந்து செல்கிறார்கள். நாம், பாசத்தை தலையில் சுமந்து செல்கிறோம் என தெரிவித்த ஓபிஎஸ், பணமா? பாசமா? என்கிற போட்டியில் பாசம்தான் உறுதியாக வெற்றி பெறும் என பேசினார்.

விரைவில் இந்த பினாமி ஆட்சி தூக்கி எறியப்படும் என்றும். ஜெயலலிதா விரும்பிய மக்களாட்சி தத்துவத்தின்படி அவருடைய நல்லாட்சி மீண்டும் மலரும் என்றும் ஓபிஎஸ் தெரிவித்தார்.