அதிமுகவில் முதல்வர் வேட்பாளர், வழிகாட்டுதல் குழு அமைப்பு போன்ற விவகாரங்களில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. முதல்வர் வேட்பாளர் யார் என்பதை ஓபிஎஸும் - இபிஎஸும் அக்டோபர் 7-ம் தேதி அறிவிப்பார்கள் என்று துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி தெரிவித்தார். 
இந்நிலையில் இன்று காலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள் கூட்டம் கோட்டையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் துணை முதல்வர் என்ற முறையில் ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்கவில்லை. ஆனால், அதே நேரத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அவருடைய வீட்டில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார். 2017-ல் ஓபிஎஸ் தர்மயுத்தன் நடத்தியபோது அவருடன் துணை நின்ற கே.பி. முனுசாமி, முன்னாள் எம்.பி மனோஜ் பாண்டியன் ஆகியோர் இந்த ஆலொசனையில் இருந்தனர். அதேபோல துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் ஓபிஎஸுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
இதற்கிடையே திருப்பமாக கடந்த ஆண்டு அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட மணிகண்டனும் ஓ.பன்னீர் செல்வத்தைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதிமுக செய்தித் தொடர்பாளர் புகழேந்தியும் ஓ.பன்னீர் செல்வத்தைச் சந்தித்து பேசினார். மாவட்ட ஆட்சியர் கூட்டத்தில் பங்கேற்காமல் அதிமுக நிர்வாகிகளுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனையில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தபோது, அவருடைய வீட்டுக்கு வெளியே 20-க்கும் மேற்பட்டவர் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் என்று தொடர்ந்து கோஷம் எழுப்பியவண்ணம் இருந்தனர்.