தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் குடும்பத்தினர் மீதான சொத்துக்குவிப்பு புகார் குறித்து விசாரணை நடத்த தமிழக அரசு தரப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் ஓபிஎஸ்-க்கு நெருக்கடி முற்றியுள்ளது. விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாராதி மற்றும் அறப்போர் இயக்கம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. அரசின் விளக்கத்தை ஏற்று ஆர்.எஸ்.பாராதி தொடுத்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது. 

முன்னதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அவரது மனைவி, மகன்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்துள்ளதாக, திமுகவின் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த வாரம் மனு தாக்கல் செய்தார். அதில் துணை முதல்வராக உள்ள ஓ.பன்னீர்செல்வம், அவரது மனைவி விஜயலட்சுமி, மகன்கள் ரவீந்திரநாத், ஜெயபிரதீப், மகள் கவிதாபானு பெயர்களில் சொத்துகளை வாங்கி குவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், வருமானம் குறித்த தவறான தகவல்களை தேர்தல் வேட்புமனுவில் தெரிவித்துள்ளார். 

வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களிலும், இந்திய நிறுவனங்களிலும் ஓ.பன்னீர்செல்வத்தின் வாரிசுகள் முதலீடு செய்துள்ளனர். இது பல்வேறு சந்தேகத்தை எழுப்புகிறது. மேலும் சேகர் ரெட்டி டைரியில் ஓபிஎஸ் பெயர் இடம் பெற்றுள்ளது என மனுவில் தெரிவித்தார். இதன்மூலம் தனக்கு வாக்களித்த மக்களுக்கு ஓபிஎஸ் துரோகம் இழைத்துள்ளார் பன்னீர்செல்வம்.

இதுதொடர்பாக மார்ச் 10-ம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தோம். ஆனால் இதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சொத்துக் குவிப்பு தொடர்பான விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என ஆர்.எஸ்.பாரதி தனது மனுவில் தெரிவித்திருந்தார். 

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன் என அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க ஏன் உத்தரவிடக் கூடாது என வினவினர். இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்த போது ஓபிஎஸ் மற்றும் குடும்பத்தினர் மீதான சொத்துக்குவிப்பு புகார் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதனால் ஓபிஎஸ்-க்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.