Asianet News TamilAsianet News Tamil

சித்திரை 1 தமிழ்ப் புத்தாண்டாக தொடர நடவடிக்கை தேவை… மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்த ஓ.பன்னீர்செல்வம்!!

சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டாக தொடர்ந்திட முதலவர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். 

ops asks chithirai 1st should continue as tamil new year
Author
Tamilnadu, First Published Dec 2, 2021, 8:32 PM IST

சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டாக தொடர்ந்திட முதலவர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெட்ரோல் விலை குறைப்பு, டீசல் விலை குறைப்பு, நீட் தேர்வு ரத்து, மாதம் ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் முறை, மாதம் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகை, கல்விக் கட்டணம் ரத்து, முதியோர் உதவித் தொகை உயர்வு, பழைய ஓய்வூதியத் திட்டம் என திமுக-வால் அள்ளி வீசப்பட்ட வாக்குறுதிகள் எப்போது நிறைவேற்றப்படும்; வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் எப்போது வழங்கப்படும் என்று மக்கள் காத்திருந்த நிலையில், மக்கள் எண்ணத்திற்கு முற்றிலும் மாறான வகையில், 2022 ஆம் ஆண்டு பொங்கல் பரிசுப் பையின் முகப்பில் இனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகள் என்று குறிப்பிட்டு இருப்பது தமிழக மக்களின் நம்பிக்கையை சிதைக்கும் விதமாக அமைந்துள்ளது. தமிழ்நாட்டிலே பல நூற்றாண்டுக் காலமாக சித்திரை மாதப் பிறப்பு தான் தமிழ்ப் புத்தாண்டு தினமாக தமிழக மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இது காலம் காலமாக கடைபிடிக்கப்படுகின்ற மரபு. இந்த மரபினை முற்றிலும் சீர்குலைக்கும் விதமாக, எவ்வித வலுவான ஆதரமும் இல்லாமல், மக்களின் உணர்வுகளுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில், தை மாதம் முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்பதற்கு வழிவகை செய்யும் சட்டம் முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில், 2008 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது.

ops asks chithirai 1st should continue as tamil new year

இந்தச் சட்டம் மக்கள் மீது திணிக்கப்பட்ட ஒரு சட்டம், இந்தச் சட்டம் சாதாரண மனிதனின் உரிமையை பறிக்கும் சட்டம் என்று அப்போதே மக்கள் சென்னார்கள். பண்டிகை என்பது இதுநாள் வரை கடைபிடித்துவந்த முறைப்படி, மரபுப்படி, கலாச்சாரத்தின்படி, பழக்கவழக்கத்தின்படி கொண்டாடப்படுவது. இதற்கு எதற்குச் சட்டம்? இதில் ஏன் அரசு தலையிடுகிறது? என்பதுதான் மக்களின் வாதமாக இருந்தது. எனவேதான், சட்டம் இயற்றப்பட்டும், தமிழ்நாட்டு மக்கள் சித்திரை முதல் தேதியையே தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடி வந்தனர். இந்தத் தருணத்தில், அம்மா 2011 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன், தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்பதற்கு வழிவகுத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென்ற கோரிக்கை மனுக்கள் தமிழ்நாட்டு மக்களால் அம்மாவிடம் அளிக்கப்பட்டன. தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்த அம்மா, மக்கள் நம்பிக்கை சட்டத்தின் மூலம் மாற்றப்படுவது சரியல்ல என்பதைக் கருத்தில் கொாணடு, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கும், கருத்துகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில், யாருக்கும் பயனளிக்காத, காலம் காலமாக போற்றிப் பாதுகாத்து வந்த மரபுகளை மீறுகின்ற, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளைப் புண்படுத்துகின்ற இந்தச் சட்டத்தினை ரத்து செய்வதுதான் பொருத்தமாக இருக்கும் எனக் கருதி, தமிழ்நாட்டு மக்களின் விருப்பத்திற்கு மாறாக இயற்றப்பட்ட சட்டத்தை நீக்கும் வகையில், தமிழ்நாடு தமிழ்ப் புத்தாண்டு நீக்கச் சட்ட முன்வடிவை 23-08-2011 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றி அதனைச் சட்டமாக்கினார்கள். இந்தச் சட்டத்தின்படி , தை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு என்கிற சட்டம் ரத்து செய்யப்பட்டது.

ops asks chithirai 1st should continue as tamil new year

இந்தச் சூழ்நிலையில், 2022 ஆம் ஆண்டு பொங்கல் பரிசுப் பையின் முகப்பில் இனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதனைக் கண்டு மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள். 2022 ஆம் ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு சென்ற ஆண்டைப் போல ரொக்கமாக 2,500 ரூபாய் அரசு வழங்கும் என்று மக்கள் எதிர்பார்த்திருந்த சூழ்நிலையில், இதுபோன்ற வெத்து அறிவிப்பு மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. இதுவும் ஒருவிதமான கருத்துத் திணிப்பு. எந்தெந்தப் பண்டிகையை எப்படிக் கொண்டாட வேண்டும், எப்பொழுது கொண்டாட வேண்டும் என்பதை முடிவு செய்யும் உரிமை மக்களிடத்தில் தான் இருக்கிறது. அதை மக்கள் விருப்பப்படி விட்டுவிடுவது தான் நல்லது என்று மக்கள் நினைக்கிறார்கள். எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் மக்களின் உணர்ச்சிகளுக்கு, கருத்துக்களுக்கு மதிப்பளித்து, சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்ற நடைமுறை, மரபு, கலாச்சாரம் தொடர்ந்திடவும், பொங்கல் பரிசுப் பையின் முகப்பில் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள் என்ற வாசகங்களை குறிப்பிட்டு தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கைக்கு எதிராக உள்ளதை நிறுத்திடவும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்  என்று தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios