தமிழகத்தில் தற்போது ஊழல் மலிந்து கிடக்கிறது என்றும் அனிதாவின் மரணம் எங்களை அரசுக்கு எதிரான நிலையை எடுக்க வைத்து விட்டது என்றும் டிடிவி தினகரன் ஆதரவு எம்.பி.க்கள் செங்குட்டுவன், உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளனர்.

வேலூர் தொகுதி அதிமுக எம்.பி. செங்குட்டுவன் மற்றும் திண்டுக்கல் தொகுதி எம்.பி. உதயகுமார் ஆகியோர், அதிமுக  அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனை அவரது அடையாறு இல்லத்தில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இரண்டாக பிரிந்த அணிகள் அண்மையில் மீண்டும் இணைந்தன. போர்க் கொடி தூக்கிய ஓபிஎஸ்க்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்-ம் டி.டி.வி.தினகரனை ஒதுக்கத் தொடங்கினர். அதிமுகவில் இருந்து சசிகலா மற்றும் தினகரனை நீக்கப்போவதாக அறிவித்தனர்.

தினகரனுக்கு மாநிலங்களவை உறுப்பினர்களான விஜிலா சத்யானந்த் , நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட  6 எம்.பி.க்கள் ஆதரவு அளித்து வந்த நிலையில் தற்போது வேலுர் தொகுதி எம்.பி. செங்குட்டுவன் மற்றும் திண்டுக்கல் தொகுதி எம்.பி. உதயகுமார் ஆகியோர் ஆதரவு
தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், டிடிவி தினகரனை சந்தித்த பிறகு, எம்.பி.க்கள் செங்குட்டுவன், உதயகுமார் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய எம்.பி. செங்குட்டுவன், அனிதாவின் மரணம் எங்களை அரசுக்கு எதிரான நிலையை எடுக்க வைத்து விட்டது. உலகிலேயே ஊழல் மிகுந்த அரசாக தமிழக அரசு செயல்படுகிறது.

எந்த அரசை ஊழல் அரசு என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினாரோ அந்த அரசிலேயே அவர் அங்கம் வகிக்கிறார். துணை முதலமைச்சராக பதவியும் வழங்கப்பட்டுள்ளது. 

ஊழலுக்கு எதிரான நிலைப்பாட்டைத்தான் டிடிவி தினகரன் எடுத்துள்ளார். ஊழல் இல்லாத ஆட்சி கொடுக்க வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் கொள்கை. 

இவ்வாறு எம்.பி. செங்குட்டுவன் கூறினார்.