ஜெயலலிதா ஒரு அதிரடி உத்தரவு போட்டார். அதை தலைமை கழகம் இப்படி அறிவித்தது ’கழகத்தினர் வைக்கும் பேனர்கள் மற்றும் ஒட்டும் போஸ்டர்களில் அண்ணா, புரட்சித்தலைவர் மற்றும் அம்மா அவர்களின்  போட்டோக்கள் மட்டுமே இடம்  பெற வேண்டும். இது தவிர எந்த நிர்வாகி உள்ளிட்ட யாரது போட்டோவும் இடம் பெறக்கூடாது.’ என்று. அ.தி.மு.க.வினர் மூஞ்சை உர்ர்ர்ர்ரென தொங்கப் போட்டுக் கொள்ள காரணமாக அமைந்த உத்தரவு இது. 

ஆனால் ஜெ., இப்படியொரு உத்தரவிட இரண்டு காரணங்கள்...1) தன் போட்டோவை விட பல இடங்களில் நிர்வாகிகளின் போட்டோக்கள் பெரிதாகவும், ஈர்ப்பாகவும் அமைந்துவிடுவது. 2) ஒரு நிர்வாகி தனது போட்டோவை போட்டு பேனர் வைக்க, அதை போட்டி நிர்வாகி கிழித்தெறிய, இதனால் சண்டைகள் மூண்டு கட்சி பெயர் அசிங்கப்படுகிறது. 

ஆக அம்மா போட்ட அதிரடி ஆர்டர் பல வகையில் சிறப்பான விளைவுகளையே தந்தது. 

ஆனால், ஜெ., மறைவுக்குப் பின் பல விஷயங்களை மறந்தும், மாறியும், எல்லை மீறியும் போய்க் கொண்டிருக்கும் அ.தி.மு.க.வினர் இந்த பேனர், போஸ்டர் விஷயத்தில் உட்கட்சி பூசலின் உச்சம் தொட்டுக் கொண்டிருக்கின்றனர். அதிலும் எடப்பாடியார் தரப்புதான் டாப் கியரில் போய் பன்னீர் அணியை அநியாயத்துக்கு அசிங்கப்படுத்துகிறது என்று தகவல். 

இதற்கு இரு உதாரணங்கள். ஒன்றை கடந்த இரு தினங்களுக்கு முன்பே நம் ஏஸியாநெட் தமிழ் இணையதளம் சுட்டிக்காட்டிவிட்டது. அதாவது பன்னீரின் சொந்தமாவட்டமான தேனியிலேயே எடப்பாடியாருக்கு பேரவை துவக்கப்பட்ட அறிவிப்பு பேனர் விவகாரம் அது. பால்பாண்டியன் என்பவர் செய்திருந்த அந்த காரியம் பன்னீர் அணியை அதிரவைத்தது. 

இந்நிலையில், விழுப்புரம் தெற்கு மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் நகர கழகம் சார்பாக ஒரு பேனர் டிஸைன் செய்யப்பட்டுள்ளது. அதில் ஜெ.,வை விட பெரிதாக எடப்பாடியாரின் படத்தைப் போட்டு, மிக மிக மரியாதை கருதி அவரது பெயரை குறிப்பிடாமல் ‘தமிழகத்தின் புரட்சி முதல்வர் எடப்பாடி சேகுவேரா’ அவர்களே! என்று குறிப்பிட்டுள்ளனர். கீழே ‘தமிழகத்தின் துணை முதல்வர் மாண்புமிகு ஓ.பன்னீர்செல்வம்’ அவர்களே என்று முடித்துவிட்டனர். 

அமைச்சர் சி.வி.சண்முகத்தின் சொந்த மாவட்டமான விழுப்புரத்தில் பன்னீருக்கு ஸ்டாம்ப் சைஸ் அளவு கூட இல்லாமல் போட்டோவை போட்டதோடு, எடப்பாடியாரை பெயரை கூட குறிப்பிட்டாமல் மரியாதை தந்து வணங்கியிருப்பது இரு அணிகளுக்கும் இடையில் பெரும் பிரளயத்தை மூட்டியிருக்கிறது. 

கடந்த சில நாட்களாக இரு தரப்புக்குள்ளும் இருந்து வந்த உரசல் இப்போது பன்னீரை மட்டம் செய்து, எடப்பாடியாரை தூக்கி வைத்து கட்டப்படும் பேனர்களின் மூலமாக உச்சம் தொட்டிருக்கிறது. இதன் நீட்சி மீண்டும் பன்னீர் உடைத்துக் கொண்டு வெளியேறி, தர்மயுத்தம் சீசன் - 2வை துவக்கினாலும் ஆச்சரியமில்லை என்கிறார்கள். 

இந்நிலையில் வெறும் போஸ்டர், பேனர்களால் இரு முதல்வர்களுக்கும் இடையில் பனிப்போர் மூண்டிருப்பதை சமாதானம் செய்யும் நோக்கில், மாஜி அமைச்சர் வளர்மதியின் ஆதரவாளர்கள் சென்னையில் கழக இலக்கிய அணி சார்பாக ஒரு போஸ்டரை ஒட்டியுள்ளனர். அதில் பழனிசாமி, பன்னீர்செல்வம் இருவரது கரங்களையும் ஜெயலலிதா ஒன்றாக இணைத்து வைப்பது போல் போட்டோ டிஸைன் செய்துள்ளனர். 

ஹும்! போர் விமானம் போல் எப்போதும் பாய்வதற்கு தயாராய் இருக்கும் அ.தி.மு.க. இப்போது இப்படி போஸ்டர் யுத்தத்தினால் சரிந்து சிதைவது கேவலம்.