ops and pandiyaraja case in chennai high court

ஓபிஎஸ், மாஃபா பாண்டியராஜன் பதவி பறிக்கப்படுமா ? அரசுக்கு எதிராக வாக்களித்த வழக்கை விசாரணக்கு ஏற்றுக் கொண்டது உயர்நீதிமன்றம் !!!

எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக அரசு கொறடா உத்தரவை மீறி வாக்களித்த துணை முதலமைச்சர் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர் மா*பா பாண்டியராஜன், ஆகியோரின் பதவிகளை பறிக்க வலியுறுத்தி திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.

ஓபிஎஸ் மற்றும் மாஃபாய் பாண்டியராஜன் ஆகியோர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியுடன் இணைந்தததை அடுத்து அவர்கள் இருவரும் தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றனர்.

ஓபிஎஸ், துணை முதலமைச்சராகவும், மாஃபா பாண்டியராஜன் தமிழ் வளர்ச்சித்துறையை அமைச்சராகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

ஓபிஎஸ் தனி அணியாக இயங்கியபோது, எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக இயங்கினார். குறிப்பாக கடந்த பிப்ரவரியில் எடப்பாடி பழனிசாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தபோது, ஓபிஎஸ் அணியின் 11 எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.

அரசு கொறடா தாமரை ராஜேந்திரன் பிறப்பித்த உத்தரவை ஏற்காமல் இவர்கள் செயல்பட்டபோதும் இவர்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எதையும் அப்போது எடுக்கவில்லை.

ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இழந்துவிட்டதாக தற்காலிக கவர்னராக இருந்த வித்யாசாகர் ராவிடம் மனு கொடுத்த டி.டி.வி.தினகரன் அணியின் 18 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தார்.

இந்த முரண்பாடான நடவடிக்கை தொடர்பாக டி.டி.வி.தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள் ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். கட்சி மாறி வாக்களித்த ஓபிஎஸ் உள்ளிட்ட அவரது அணி எம்.எல்.ஏ.க்கள் 12 பேர் மீதும் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக கொறடா சக்கரபாணி தொடர்ந்த வழக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.

மேலும் திமுக முன்னாள் அமைச்சரும் எம்.எல்.ஏ.வுமான பிச்சாண்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 22 ஆம் தேதி புதிய வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.

 அதில், ‘எடப்பாடி பழனிசாமி அரசை எதிர்த்து சட்டமன்றத்தில் வாக்களித்தவர்களான ஓ.பன்னீர்செல்வம், மாஃபாய் பாண்டியராஜன் ஆகியோர் இதே அமைச்சரவையில் இயங்குவது சட்டத்திற்கு விரோதமானது. இந்த அரசு மீது நம்பிக்கை இல்லாதவர்கள், இந்த அரசின் அங்கமாக எப்படி தொடர முடியும்?’ என கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இன்று விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.