ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த வரை அதிமுக ஒரு எஃகு கோட்டையாக இருந்து வந்தது. அவர் மறைவுக்கு பிறகு அதிமுகவின் செல்வாக்கு சரிய தொடங்கியது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுகவை சேர்ந்த 60 லட்சம் உறுப்பினர்கள் தங்களது உறுப்பினர் அட்டையை புதுப்பித்து கொள்ளவில்லை என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் அதிமுக தலைமைக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வருடத்திற்கு ஒருமுறை அதிமுக உறுப்பினர் சேர்க்கை மற்றும் உறுப்பினர் அட்டையை புதுப்பித்த பிறகு கணக்கெடுப்பு நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டிற்கான உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதற்கான காலஅவகாசம் தொடர்ந்து 4 முறை நீட்டிக்கப்பட்டது. பின்பு கடந்த ஜூன் மாதம் 30-ம் தேதியுடன் நிறைவடைந்தது.இந்நிலையில் கடந்த 2 வாரங்களாக விண்ணப்பங்களை கணக்கிடும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதில் உறுப்பினர்கள் எண்ணிக்கையை பார்த்து அதிமுக தலைமை அதிர்ச்சியடைந்தது. ஒன்றரை கோடி உறுப்பினர்களில் சுமார் 90 லட்சம் பேர் தான் தங்களது உறுப்பினர் அட்டையை புதுப்பிக்க விண்ணப்பித்துள்ளனர். இதன்மூலம் சுமார் 60 லட்சம் பேர் மீண்டும் தங்களின் உறுப்பினர் அட்டையை புதுப்பிக்க விரும்பவில்லை. இது அதிமுகவிற்கு பெரும் சறுக்கலாகவே கருதப்படுகிறது.எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் புகழ் காரணமாகவும் அவர்களின் திரை ரசிகர்களாகவும் இருந்தவர்கள் எல்லாம் கட்சியில் சேர்ந்தனர். ஜெயலலிதா இருந்த போது அதிமுகவின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 1.5 கோடியாக இருந்தது. ஆனால் இப்போது தலைகீழாக மாறியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக வட்டாரத்தில் விசாரித்த போது நம்பிக்கையற்ற தலைமையாலும் ஏற்பட்ட குழப்பங்களின் காரணமாகவே 60 லட்சம் பேர் தங்களை மீண்டும் இணைத்து கொள்ள விரும்பவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.