ops and edappadi joining together
சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி பிடித்து, சில எம்.எல்.ஏ, எம்.பி க்களுடன் அணி பிரிந்த பன்னீரை, துரோகி என சசிகலா தரப்பினர் கூறி வந்தனர்.
ஜெயலலிதா மரணத்திற்கு நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று, சசிகலா தரப்புக்கு எதிராக போராட்டமே நடத்தியது பன்னீர் அணி.
ஆனால், அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில், வருமான வரி துறையினர் நடத்திய சோதனைக்கு பின், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நிறுத்தப்பட்டதால், இரு அணிகளுமே கொஞ்சம் அடக்கி வாசித்தன.

அதே சமயம், தினகரனை கண்டால் பொட்டிப்பாம்பாக அடங்கும் அமைச்சர்களில் சிலர், அவர் எதிரிலேயே, விஜயபாஸ்கரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் குரல் கொடுத்தனர்.
மேலும், துணை பொது செயலாளர் பதவியில் இருந்து தினகரன் விலக வேண்டும், அப்போதுதான், கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்ற முடியும் என்று, சில அமைச்சர்கள் நேரடியாகவே பேச, அதிர்ந்து போனார் தினகரன்.
அடுத்து, யார் வீட்டுக்கு ரைடு வரப்போகிறதோ என்று அஞ்சி நடுங்கிய அமைச்சர்கள் பலர், ஓ.பி.எஸ் வந்தால் மட்டுமே, சின்னத்தை மீட்க முடியும், ரைடில் இருந்தும் தப்பிக்க முடியும் என்று வெளிப்படையாகவே பேச ஆரம்பித்தனர்.

ஆரம்பத்தில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தினகரன், நேற்று டெல்லியில் சுகேஷ் சந்திரா போலீசில் பிடிபட்டு, தம்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை அடுத்து, எதுவும் சொல்லாமல் அமைதியாகி விட்டார்.
சிறையில் உள்ள சசிகலாவோ, கட்சியை காப்பாற்ற வேறு வழி இல்லை என்றால், தமது பொது செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய தயார் என கூறியதாகவும் ஒரு தகவல் உள்ளது.
கட்சியிலும், ஆட்சியிலும் யாருடைய குறுக்கீடும் இனி இருக்காது என்று சசிகலாவின் தம்பி திவாகரன், முதல்வர் எடப்பாடிக்கு கடிதமே எழுதி உள்ளதாக கூறப்படுகிறது.


இந்நிலையில், தினகரன் நேற்று சென்னையில் இல்லாத சமயத்தில், அமைச்சர் தங்கமணி வீட்டில் 16 அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டம் நடந்தது, அதில் இருந்த அணிகளின் இணைப்பு பற்றி விவாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
பன்னீரையும், அவரது அணியை சேர்ந்தவர்களையும் கடுமையாக விமர்சித்து வந்த, சசிகலாவும், தினகரனும் இப்போது எதுவும் பேசாமல் வாய்மூடி இருப்பதை பார்த்தல், இதற்கு பின்னால் ஏதோ நடந்திருக்கிறது என்றே சந்தேகம் ஏற்படுகிறது.
உண்மையில், கட்சியும் அமைச்சர்களும் தினகரன் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறார்களா? அல்லது தனித்து இயங்குகிறார்களா? அல்லது பாஜக மேலிடம் அவர்களை இயங்குகிறதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
