ops alliance with bjp

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின், அதிமுக இரண்டாக பிரிந்துள்ளது. இதில், யாருக்கு இரட்டை இலை சின்னம் பெற வேண்டும் என தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக சசிகலா அணியை சேர்ந்த டிடிவி.தினகரன், தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்ததாக கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும், அவருக்கு இடை தரகர்களாக செயல்பட்ட சுகேஷ், நரேஷ் உள்பட பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், ஓ.பன்னீர்செல்வம் அணியினர், மத்திய அரசுடன் கைகோர்த்து உள்ளனர். குறிப்பாக ஜெயலலிதா மறைவின்போது அஞ்சலி செலுத்தவந்த மோடி, ஓ.பன்னீர்செல்வத்துக்கு தனது வருத்தத்தயும், ஆறுதல்களையும் தெரிவித்தார்.

அதேபோல் ஜல்லிக்கட்டு ஆர்ப்பாட்டம் நடந்தபோது, டெல்லி சென்ற ஓ.பன்னீர்செல்வம், மோடியுடன் கலந்து பேசி ஒரு முடிவை கொண்டு வந்து, ஆர்ப்பாட்டத்தை நிறுத்தினார். இதனால், ஆரம்பம் முதலே, பாஜகவினர் ஓ.பி.எஸ். அணியினருக்கு ஒத்துழைப்பு தருவதாக, எடப்பாடி அணியினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

மேலும் அதிமுகவை, பாஜக கைக்குள் வைத்து இருப்பதாக அரசியல் கட்சியினரும் விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நேற்று மாலை டெல்லியில் மோடியை சந்திக்க ஓ.பன்னீர்செல்வம் சென்றார். அப்போது, இரட்டை இலை மீட்பது குறித்தும், ஜெயலலிதா மறைவில் நீதி விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

அப்போது, பாஜகவுடன் கூட்டணி வைப்பது தொடர்பாக இருவரும் பேசியதாக கூறப்படுகிறது. முன்னதாக அதிமுக இரு அணியினரும் ஒன்று சேருவதற்கு, சசிகலா குடும்பத்தினரை வெளியேற்ற வேண்டும் என செய்தியாளர்களிடம் கூறினர்.

We will take a decision on alliance with BJP once local body elections are announced.

— O Panneerselvam (@OfficeOfOPS) May 20, 2017

இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவித்தவுடன், பாஜகவுடன் கூட்டணி வைப்பது குறித்து அறிவிப்போம் என ஓ.பன்னீர்செல்வம் பகிரங்கமாக தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம், தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவித்த பின்னர் பாஜகவுடன் கூட்டணி குறித்து கலந்தாலோசித்து அறிவிப்போம் என தெரிவித்துள்ளார்.