பாஜக வின் ஏஜெண்டாக பன்னீர்செல்வம் செயல்படுவதாக அதிமுக துணை பொது செயலாளர் தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த தினகரன் கூறியதாவது:-

பெரியகுளம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக நான் போட்டியிட்ட போது, எனக்கு அறிமுகமான அவர், சட்டமன்ற உறுப்பினராக, அமைச்சராக, முதல்வராக ஆவதற்கு நானே காரணம்.

50 வயது வரை பன்னீருக்கு, சென்னையோ மேல்மட்ட அரசியலோ தெரியாது. அவரை சென்னைக்கு அழைத்து வந்ததும், மேல்மட்ட அரசியலில் பங்கேற்க வைத்ததும் நானே.

ஆனால் நான் 20 வயதில் இருந்தே மேல்மட்ட அரசியலில் இருந்து வருகிறேன். நான் அரசியலுக்கு வரவேண்டும் என்ற எண்ணத்தோடு வரவில்லை.

எங்கள் குடும்பத்திற்கு கிடைத்த அரசியல் தொடர்பின் காரணமாக, நான்  அரசியலுக்கு வந்தேன். எம்.பி.யாக இருந்தேன். அதிமுகவின் பொருளாளராகவும் இருந்தேன்.

அதன் பிறகு, ஆறு வருடங்கள் எனக்கு எந்த பொறுப்பும் இல்லை. ஆனாலும் அரசியல் வெறி கொண்டு அலையாமல் நான் பொறுமையாகவே இருந்தேன்.

ஜெயலலிதா, மறைவு, சசிகலாவுக்கு சிறை போன்ற காரணங்களால், நான் தொண்டர்களின் விருப்பத்தோடு துணை பொது செயலாளராக இருந்து வருகிறேன்.

ஜெயலலிதா இறந்த உடன், அமைச்சர்களும், கட்சியின் மூத்த நிர்வாகிகளும், சசிகலாவைதான், முதல்வராக பொறுப்பேற்க சொல்லி வலியுறுத்தினார்.

ஆனால் அதை ஏற்க மறுத்து, பன்னீரே முதல்வராக இருக்கட்டும், அதே அமைச்சரவை தொடரட்டும் என்று கூறியவரே சசிகலாதான். அவர் நினைத்திருந்தால், அன்றே முதல்வர் ஆகி இருக்கலாம்.

அதன் பிறகு, முதல்வராக இருந்த பன்னீர்செல்வம் உள்பட மூத்த அமைச்சர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வலியுறுத்தியதன் பேரிலேயே, சசிகலா பொது செயலாளர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

அதை தொடர்ந்து, முதல்வராக இருந்த பன்னீர்செல்வத்தின் நடவடிக்கைகளில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக, அச்சம் அடைந்து, சசிகலாவை முதல்வராக்க கட்சியினர் முடிவு செய்தனர். 

அதுவரை, மறைமுகமாக அவர் செய்து வந்த துரோக வேலைகள், அதன் பிறகு வெளிப்படையாக தெரிய ஆரம்பித்து விட்டது.  அவர் யாருடைய ஆளாக இருந்து கொண்டு கட்சியை உடைக்க முயற்சிக்கிறார் என்றும் தெரிந்தது. பன்னீர் முதல்வராக தொடர திமுக ஆதரவு அளிக்கும் என்று சட்டமன்றத்தில்  திமுக சொன்னதே அதற்கு முக்கிய சான்றாகும்.

ஸ்டாலின் மற்றும் பாஜக உடன் சேர்ந்து கொண்டு, அவர் கட்சியை உடைக்க முயல்வதும், பாஜக ஏஜெண்டாக செயல் படுவதும் வெளிப்படையாகவே தெரிந்து விட்டது.

திமுக மற்றும் பாஜக வுடன் இணைந்து பன்னீர்செல்வம் செய்த சதியின் காரணமாகவே, இரட்டை இல்லை சின்னம் இன்று முடக்கப்பட்டுள்ளது. நிச்சயம் தொண்டர்கள் துணையுடன் அதை வென்றெடுப்போம்.

அரசியல் வெறி பிடித்து, பெற்ற தாயை அழித்தாவது அரசியல் செய்ய வேண்டும் என்ற வெறியுடன் பன்னீர் செயல்பட்டு வருகிறார். அவருடன் தள்ளாத 75 வயது மதுசூதனனும் சேர்ந்து கொண்டுள்ளார்.

முதல்வர் எடப்பாடி, ஆட்சி மன்ற குழுவில் இல்லாதது அவரை அவமதிக்கும் செயல் அல்ல. முதல்வர் என்பதால் அவர் ஆட்சி மன்ற குழுவில் இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை.

பொது செயலாளராகவும் முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா ஆட்சி மன்ற குழுவில் இருந்தார். பொருளாளராக இருந்த பன்னீரும் ஆட்சி மன்ற குழுவில் இருந்தார் அவ்வளவுதான்.

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, முதல்வர் பொறுப்பில் இருந்த பன்னீர்செல்வத்திடமே, மருத்துவ குழுவினர் சிகிச்சைகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அவ்வப்போது தெரிவித்து வந்தனர்.

அவை அனைத்தும் அறிந்து கொண்டு, இப்போது ஜெயலலிதா  மரணத்தில் மர்மம் இருப்பதாக அவர்  ஒப்பாரி வைப்பது, அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியை தவிர வேறு எதுவும் இல்லை.

பாஜக ஏஜெண்டாக செயல் பட்டு, அதிமுகவை உடைக்கவும், சின்னத்தை முடக்கவும் அவர் செய்யும் அனைத்து துரோக வேலைகளையும், எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசிகளான அதிமுக தொண்டர்கள்  முறியடிப்பார்கள் என்றும் தினகரன் தெரிவித்தார்.