சசிகலா, தினகரனின் திட்டமிட்ட நாடகமிது. எல்லாம் எங்களுக்குத்தான் வேண்டும் என மைக் முன்பு நின்று பட்டையை கிளப்பினார் கே.பி.முனுசாமி.

சும்மா விடுவார்களா எடப்பாடி கோஷ்டியினர். கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவன் வானத்தைக்கீறி வைகுண்டத்தை காட்டுறேன்னு என பன்னீரை கிண்டல் அடித்தனர்.

போதாத குறைக்கு டிடிவி தினகரன் அணியின் வெற்றிவேல் மற்றும் தமிழ்ச்செல்வன் ஆகியோரும் அதிரடி சரவெடிகளை கொளுத்தி போட்டனர்.

டிடிவியின் மற்றொரு தீவிர திடீர் ஆதரவாளரான நாசா என நெட்டிசன்களால்  அன்போடு அழைக்கப்படும் நாஞ்சில் சம்பத்தும் அவன் இவன் என ஏக வசனத்தில் பன்னீரை ஏசினார்.

இப்படி ஆளாளுக்கு சிவகாசி பட்டாசை வெடித்து சிதறியதால் சசிகலா குடும்பத்தை ஓரங்கட்டிய பின்னரும் பேச்சுவார்த்தை எனும் முதல் முயற்சியே டமால் டுமீல் ஆகி போனது.

எப்படியாவது இரட்டை இலையை பெற்று விடலாம், சிக்கல் இல்லாமல் ஆட்சியை இன்னும் 4 வருடங்களுக்கு ஓட்டி விடலாம் என்ற எடப்பாடியின் கனவில் மண் விழுந்தது.

இனி பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பே இல்லை என்ற நிலை உருவாகி விட்ட நிலையில் எப்படியாவது பேட்ச் - அப் செய்து விட வேண்டும் என எடப்பாடி முடிவு எடுத்துவிட்டாராம்.

அதன் முதல் கட்டமாக தனது அணியை சேர்ந்த எந்த ஒரு அமைச்சரோ நிர்வாகியோ தங்கள் இஷ்டத்திற்கு எதிர் அணியை சேர்ந்த யாரையும் விமர்சிக்க கூடாது என கண்டிப்போடு தெரிவித்து விட்டாராம்.

இதனால் வாய் துடுக்கோடு பேசி வந்த மீன்வளத் துறை ஜெயக்குமார், சட்டத்துறை சி.வி.சண்முகம் அடக்கி வாசிக்க தொடங்கியுள்ளனர்.

இதே போன்று ஒ.பி.எஸ் குரூப்பில் சகட்டு மேனிக்கு பேசிவந்த முன்னாள் அமைச்சர் முனுசாமியும் அடக்கி வாசிக்க தொடங்கி விட்டார்.

இன்று அவர் அளித்த பேட்டியில் எதிர் அணியினர் யாரையும் சாடாமல் பேச்சுவார்த்தைக்கு தாங்கள் தயாராக இருப்பதாகவும், அதற்காக குழு அமைக்க உள்ளதாகவும் கூறிவிட்டு நமக்கு ஏன் வம்பு என்ற ரீதியில் பேட்டியை முடித்து விட்டு வீட்டுக்குள் சென்று விட்டார்.

எடப்பாடி மற்றும் ஒ.பி.எஸ் இருதரப்பினரின் நடவடிக்கையை பார்க்கும்போது இரு அணிகளும் ஒரே மாதிரியான நடவடிக்கையில் ஈடுபடுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது ஒ.பி.எஸ் அணியினர் வாய்க்கு வந்ததை பேசினால் எடப்பாடி அணியினரும் பதிலுக்கு பேசுகின்றனர். எடப்பாடி அணியினர் அமைதி காத்ததால் ஒ.பி.எஸ் அணியினரும் அமைதி காக்கின்றனர்.

இதிலிருந்து இரு அணியினரையும் ஆட்டுவிக்கும் சக்தி ஒன்றுதான் என்பது தெளிவாக தெரிகிறது.