சர்வாதிகாரி எடப்பாடி பழனிச்சாமி எடுக்கும் முடிவுக்கெல்லாம் ஓ.பன்னீசெல்வம் கட்டுப்படும் நிலைக்கு வந்துவிட்டார் என்று அதிமுகவிலிருந்து நிக்கப்பட்ட புகழேந்தி விமர்சித்துள்ளார். 

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட புகழேந்தி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில், “அதிமுக தொண்டர்களும் நிர்வாகிகளும் புகழேந்தி நீக்கப்பட்டதாகக் கருதவேண்டாம். பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்குப் பிணை கொடுத்து அந்த வழக்குக்காக 20 ஆண்டு காலம் போராடி, அதன் மூலம் பல ஆண்டுகளாக ஜெயலலிதாவின் மதிப்புக்கும், அவரது அன்புக்கும் உரியவனான புகழேந்தி, எடப்பாடி பழனிசாமி எனும் சர்வாதிகாரியால் நீக்கப்பட்டிருக்கிறேன் என்பதே செய்தி.
தேர்தலில் 20 தொகுதிகளில்கூட வெல்ல அதிமுகவுக்கு அருகதை இல்லை. எங்களால்தான் அதிமுக 47 சதவீத வாக்குகளைப் பெற்றது. எங்களால்தான் அதிமுக வெற்றி பெற்றது என்று சொல்கிறார்கள். எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் வந்த இயக்கம் இது. இந்த இயக்கத்தை ஒரு சிறிய கட்சியைச் சேர்ந்தவர் விமர்சித்ததைப் பட்டியலிட்டு இப்படிப் பேசலாமா என்று நான் கேட்டது தவறா? அதற்காக என்னைக் கட்சியை விட்டு நீக்குவார்களா? எவ்வளவு கொடூரமான மனிதர் என்பதை எடப்பாடி பழனிச்சாமி நிரூபித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி முதல்வர் பதவிக்கே அருகதை இல்லாதவர். பியூன் வேலைக்குக்கூட லாயக்கில்லை என்றெல்லாம் பேசியது ஞாபகம் இருக்கிறதா? இப்படி பேசிய மனிதரை அவரது குற்றச்சாட்டுக்கு பதில் சொன்னதற்காக நான் பழி வாங்கபட்டிருக்கிறேன். அப்படியென்றால் இக்கட்சி எந்த நிலைக்குப் போகிறது என்பதை ஒட்டுமொத்தக் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் புரிந்துகொள்ள வேண்டும்.
நீங்கள் எப்படிப்பட்ட மனிதர் என்பதை அன்புமணி ராமதாஸ் தோலுரிக்க வேண்டிய அவசியமில்லை. இனி நானே அரசியலில் தோலுரித்து உங்களை எங்கே நிறுத்த வேண்டுமோ அங்கு நிறுத்துவேன். நான் சசிகலாவோடும், டிடிவி தினகரனோடும் எந்தத் தொடர்பிலும் இல்லை. ஆனால், சசிகலா காலில் விழுந்து முதல்வரானவர் என்று நாடே கைகொட்டி சிரிக்கும் நேரத்தில் அடுத்த தவறைச் செய்துள்ளார். சந்திப்போம் பழனிசாமி.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred


 நிறைய விஷயங்கள் உள்ளன. அதெல்லாம் ஒவ்வொன்றாக வெளியில் வரும். இனி எடப்பாடி பழனிசாமி தப்பிக்கவே முடியாது என்கிற நிலை ஏற்பட்டுவிட்டது. போகப்போக அவருக்குப் புரியும். ஓ.பன்னீர்செல்வம் குறித்து நான் பேச விரும்பவில்லை. இந்த சர்வாதிகாரி எடுக்கும் முடிவுக்கெல்லாம் அவர் கட்டுப்படும் நிலைக்கு வந்துவிட்டார். கட்சி முழுவதுமாக எடப்பாடி பழனிசாமி தரப்பினரின் கைக்குள் சென்றுவிட்டது.” என்று புகழேந்தி தெரிவித்துள்ளார்.