துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீது 2 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் புகாரை தேனி வடக்கு மாவட்டச் செயலாளர் தங்கத்தமிழ்ச்செல்வன் சுமத்தியுள்ளார்.  

தேனி வடக்கு மாவட்டச் செயலாளர் தங்கத்தமிழ்ச்செல்வன் தேனியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கேரள மாநிலத்தில் ரூ.2,000 கோடிக்கு சொத்து வைத்திருப்பதாக கேரள பத்திரிக்கையான மலையாள மனோரமா செய்தி வெளியாகியுள்ளது. இதுகுறித்து குற்றம் சாட்டும் என் மீதும் கேரள பத்திரிக்கை மீதும் எந்தவொரு வழக்கும் ஓபிஎஸ் சார்பில் தொடரப்படவில்லை. இதிலிருந்தே ஊழல் செய்து கேரளாவில் சொத்து சேர்த்தது உண்மையாகிறது.


இந்த ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக வருமானவரித் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். துணை முதல்வர் ஓபிஎஸின் ஊழலை எடுத்துரைத்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக பிரச்சாரம் செய்யும். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிமுக ஊழல் குறித்த பட்டியலை ஆளுநரிடம் வழங்கியுள்ளார். இரண்டாம் கட்ட பட்டியலும் தயாராகி வருகிறது. அதில் ஓ.பன்னீர்செல்வம் குறித்த ஊழலும் இடம்பெறும். அந்த ஊழல் பட்டியலும் ஆளுநரிடம் வழங்கப்பட உள்ளது.