மத்திய அமைச்சராகிறார் ஓ.பி.ஆர்... அதிமுக எதிர்கோஷ்டிகள் கலக்கம்..!
ஓ.பி.எஸ் மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கி அதிமுகவில் ஒரு கோஷ்டியை பாஜக வசம் கொண்டு வரும் திட்டத்துடன் மோடி இந்தப்பதவியை ஓ.பி.ஆருக்கு கொடுத்துள்ளதாகக் கூறுகிறார்கள்.
ஒற்றை ஆளாய் மக்களவைக்கு சென்றாலும் பாஜக அதிமுக உறுப்பினரான ஓ.ரவீந்திரநாத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது மத்திய பாஜக. நாடாளுமன்ற கூட்டத் தொடருக்கு முன் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டிய போது முக்கிய தலைவர்களான ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கிரி உள்ளிட்ட முக்கிய தலைகளே இருந்த கூட்டத்தில் ஓ.பி.ரவீந்திரநாத்தும் சரிக்கு சமமாக உட்கார வைக்கப்பட்டார்.
பதவியேற்கும் போது தமிழ் வாழ்க என திமுகவினர் எழுப்பிய கோஷங்களை முன் வைக்காமல் ஜெய்ஹிந்த், வந்தே மாதரம் என கூறியதன் மூலம் பாஜகவினரை வெறுப்பேற்றக் கூடாது, அதிருப்தியடைய வைக்கக் கூடாது என்பதில் ஓபிஎஸ் மகன் கண்ணும் கருத்துமாக இருந்தார். 17-வது மக்களவையின் சபாநாயகராக ஓம் பிர்லாவை பிரதமர் மோடி முன்மொழிந்தார். மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிதின்கட்கரி ஆகியோர் வழிமொழிந்தனர். அவர்கள் வரிசையில் ஓம் பிர்லாவை ஓ.பி.ரவீந்திரநாத் குமாரும் வழிமொழிந்தார்.
தேனியில் பிரச்சாரத்திற்கு வந்த பிரதமர் மோடியின் காலில் விழுந்தபோதே ஓ.பி.ஆர் பணிவில் பதினாறு அடி பாய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. அந்தக் கணிப்புகளுக்கு மேலும் வலுச்சேர்த்து வந்தார் ஓ.பி.ஆர். அவரது கடிதத்தின் மேல் பகுதியில் அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களுடன் பிரதமர் மோடியின் படமும் இடம் பெற்றது.
முத்தலாக் தடை மசோதாவை நாடாளுமன்றத்தில் ஆதரித்துப் பேசினார். இப்படி பாஜக மீதான பாசத்தை சமயம் கிடைக்கும் போதெல்லாம் ரவீந்திரநாத்குமார் வெளிப்படுத்தி வந்தார். அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்ற போது எம்.பி ரவீந்திரநாத் குமார் பேசுகையில் 'நான் மோடியின் மண்ணான இந்தியாவிலிருந்து வந்திருக்கிறேன்’எனப்பேசினார். குடியுரிமை சட்டத்தை ஆதரித்து பேசியதால் கம்பம் பகுதியில் சில உள்ளூர் முஸ்லிம் அமைப்பினர் எம்பி ரவீந்திரநாத் குமாருக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி போராட்டம் நடத்தினர். அவரது காரை சுற்றி வளைத்து தாக்க முயற்சி செய்தனர்.
இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட மோடி ரவீந்திரநாத்தை அழைத்து நலம் விசாரித்திருக்கிறார். இப்படி இஞ்ச் இஞ்சாக மோடி மனதில் இடம்பிடித்து விட்டார் ஓ.பி.ஆர். எம்.பி.யாக பதவி பதவியேற்கும்போதே மத்திய அமைச்சரவையில் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அப்போது முதல் ஏமாற்றத்தில் இருந்த ஓ.பி.ஆர் இம்மாதம் 14ம் தேதி மத்திய கலாச்சாரத்துறை அமைச்சராக பதவியேற்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
ஓ.பி.எஸ் மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கி அதிமுகவில் ஒரு கோஷ்டியை பாஜக வசம் கொண்டு வரும் திட்டத்துடன் மோடி இந்தப்பதவியை ஓ.பி.ஆருக்கு கொடுத்துள்ளதாகக் கூறுகிறார்கள். ஓ.பி.ஆர் மத்திய அமைச்சரானால் அடிக்கடி மோடியை சந்திக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். அதன் மூலம் ஓ.பி.எஸ் கோஷ்டி தங்களது கோரிக்கைகளை, பிறரில் குற்றங்களை எளிதாக மோடியிடம் கொண்டு போய் சேர்க்க முடியும். இதனால், எடப்பாடி அணி தங்களுக்கு பின்னடைவு ஏற்படும் எனக் கருதுகிறது.