ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் 44 நாட்கள் கழித்து சென்னையை தவிர டாஸ்மாக் கடைகள் இன்று திறக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது மனைவி, மகனுடன், வீட்டை விட்டு வெளியே வந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போராட்டம் நடத்தி வருகிறார்.

பல்வேறு கட்டுப்பாடுகளுடன் சென்னையை தவிர பிற இடங்களில் டாஸ்மாக் கடைகளை இன்று திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனுமதி வழங்கியுள்ளார். இந்நிலையில் தமிழக அரசின் இந்த முடிவிற்கு பலத்த எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

இன்று காலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சித்தரஞ்சன் சாலை இல்லத்தை விட்டு வெளியே வந்து, கொரோனா பரவல் காலத்தில், மதுக்கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் கருப்பு வண்ண உடையணிந்து, கருப்பு கொடி, பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்ளிடோர் சமூக இடைவெளியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர், ‘’நோய்த்தொற்றின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது மதுக்கடைகளைத் திறந்து, சமூகத்தின், குடும்பங்களின் அமைதியைக் குலைக்கத் தயாராகும் அதிமுக அரசுக்கு நம் எதிர்ப்பைக் காட்டுவோம். மதுபான விற்பனையை எதிர்த்து ஒரு நாள் கருப்பு சின்னம் அணியுங்கள் நோய்த்தொற்றின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது மதுக்கடைகளைத் திறந்து, சமூகத்தின், குடும்பங்களின் அமைதியைக் குலைக்கத் தயாராகும்  குடியைக் கெடுக்கும் அதிமுக அரசுக்கு நம் எதிர்ப்பைக் காட்டுவோம். கொரோனாவை ஒழிப்பதில் தோல்வி அடைந்துவிட்ட அ.தி.மு.க. அரசைக் கண்டிக்கிறோம். அடித்தட்டு மக்களுக்கு 5,000 ரூ வழங்கு. ஊரடங்கு காலத்தில் மதுக்கடை எதற்கு?’’என்ற பதாகையை ஏந்தியவாறு திமுக தலைவர் ஸ்டாலின் போராட்டத்தில் ஈடுபட்டார்.

 

இதனை அடுத்து திமுகவினர் பல்வேறு இடங்களில் இதே கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.