விருதுநகர்

தமிழக அரசு செய்த சாதனைகளை மறைக்க வேண்டும் என்று ஸ்டெர்லைட் ஆலை உட்பட பல்வேறு பிரச்சனைகளை எதிர்கட்சிகள் தூண்டி விடுகின்றன என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.

விருதுநகரில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், "'பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்' என்ற பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கை நியாயமானது.

பால் கொள்முதல் விலையை உயர்த்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆலோசனைபேரில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

தமிழகத்தில் நாள்தோறும் 35 இலட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.  ஆவின் பால் தரமாக உள்ளதால் விற்பனை அதிகரித்திருக்கிறது. 

விருதுநகர் மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி தொடங்க தேவையான முயற்சிகளை முதலமைச்சர் எடுத்து வருகிறார்

அ.தி.மு.க விலிருந்து பிரிந்துச் சென்றவர்களை முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் தொடர்ந்து ஏற்றுக் கொண்டுதான் வருகின்றனர். 

18 எம்.எம்.எல் ஏக்கள் தகுதி நீக்க வழக்கு நீதிமன்றத்தில் உள்ள நிலையில் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தகுந்த சூழ்நிலைக்கான முடிவை முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் எடுப்பார்கள். 

காவிரிக்காக தமிழக அரசு தொடர்ந்து சட்டப் போராட்டத்தின் மூலம் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. 

காவிரி பிரச்சனை உள்ளிட்ட ஏழை எளிய மக்களுக்காக தமிழக அரசு செய்த சாதனைகளை மறைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனை உட்பட பல்வேறு பிரச்சனைகளை எதிர்கட்சிகள் தூண்டி விடுகின்றன" என்று அவர் பேட்டியளித்தார்.