கொரோனா மருத்துவமுகாமில் சிகிச்சை பெற்று வருபவர்கள் தங்களுக்கு போதிய உணவு தரப்படுவதில்லை. மாத்திரைகள் வழங்கப்படுவதில்லை என வீடியோ வெளியிட்டு அதிர வைத்துள்ளனர்.

ஒட்டுமொத்த அளவில் 4,829 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 31 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 1,516 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால், தற்போது தமிழகத்தில் 3,275 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

அவர்களுக்கு கொரோனா சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிகிச்சை பெறும் தங்களுக்கு உணவு, தண்ணீர் ஆகியவை சுகாதாரமற்ற முறையில் வழங்கப்படுவதாகவும், மிளகாய் பொடியை தண்ணீரில் கலந்து குழம்பாக வழங்கப்படுவதாகவும் குற்றம்சாட்டுகின்றனர். அதேபோல் பல நாட்களாக சிகிச்சை பெற்று வரும் தங்களுக்கு உரிய நேரத்தில் உணவு வழங்கப்படுவதில்லை. மாத்திரைகள் கொடுக்கப்படுவதில்லை எனவும் புகார் தெரிவிக்கின்றனர். 

இதுகுறித்து சுகாதாரத்துறையிடம் புகார் கூறினால் உங்களை சென்னை மாநகராட்சி வசம் ஒப்படைத்து விட்டதாக கூறி நடவடிக்கை எடுக்கவில்லை என வருத்தம் தெரிவிக்கின்றனர். கொரோனா சிகிச்சை பெறுபவர்களின் இந்தக்குற்றச்சாடு ஆளும் கட்சியின் நிர்வாகத்திறனை சந்தேகம் கொள்ள வைக்கிறது. ஆகையால் இதனை எதிர்கட்சிகள் பிரச்னையாக கிளப்புவதற்கு முன் ஆளும்கட்சி நடவடிக்கை எடுத்து விழித்துக் கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.