ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் கூறிய கண்டனக் கருத்துகளை விசாரணை நீதிமன்றத்திலேயே உண்மை என்று நிரூபிக்க ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைக்க வாய்ப்பு வழங்கிய முதல்வருக்கு எனது நன்றி என்று ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

திமுக, அதிமுக இரண்டுக்கட்சிகளும் அரசியல் நிலைப்பாட்டில் விமர்சிப்பது வழக்கம். சமீபத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி 2ஜி வழக்கில் திமுகவின் சம்பந்தம் குறித்தும், சர்க்காரியா கமிஷன் விசாரணை குறித்தும் சுட்டிக் காட்டியிருந்தார். இதற்கு பதிலளித்த ஆ.ராசா, "மறைந்த உங்கள் தலைவி மீது தான் வழக்கு தொடரப்பட்டு சிறைக்கும் சென்றார், உங்கள் கட்சியில் தான் தண்டிக்கப்பட்டு சிறை சென்றவர்கள் உள்ளனர், உச்ச நீதிமன்றம் உங்கள் தலைவியை பற்றி குறிப்பிட்டுள்ளது. ஆனால் 2 ஜி வழக்கில் நானே வாதாடி குற்றமற்றவன் என வெளியில் வந்தேன், வேண்டுமானால் தலைமைச் செயலகம் வருகிறேன், முதல்வர் என்னுடன் வழக்குகள் பற்றி விவாதிக்க தயாரா?" என்று சவால்விட்டார்.

இதற்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி, "ஆ.ராசா எல்லாம் பெரிய ஆள் இல்லை? அவருடன் நாங்கள் ஏன் விவாதிக்க வேண்டும் என்று காட்டமாகப் பதிலளித்தார். இதற்கு அமைச்சர்கள் தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டது. இந்நிலையில் அதிமுக வழக்கறிஞர் பிரிவு சார்பில் செல்வக்குமார் என்பவர் அளித்த புகாரின்பேரில் ஆ.ராசா மீது 153 (வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுவது), 505 (1)(பி)(அரசுக்கு எதிராக பொது அமைதியைக் கெடுக்கும் வகையில் தூண்ட்டக்கூடிய பேச்சு, செயல்) ஆகிய இரு பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இதுகுறித்து திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா கூறுகையில்;- என் மீது குற்றவியல் வழக்கு தொடர்ந்த முதல்வருக்கும், தமிழக காவல்துறைக்கும் ஆ.ராசா நன்றி தெரிவித்துள்ளார். ஜெயலலிதா ஊழல் குறித்த உச்சநீதிமன்ற கண்டனங்களை நிரூபணம் செய்ய வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் மூலம் என்னை அச்சுறுத்தலாம் என முதல்வர் நினைத்தால் அது அவருடைய அறியாமை தனம் என திமுக எம்.பி. ஆ.ராசா கூறியுள்ளார்.