தற்போது வாய்ப்பில்லாதவர்களுக்கு தகுதியில்லை என்ற அர்த்தமில்லை எல்லாருக்கும் பிறகு வாய்ப்பிருக்கிறது. வெற்றி பெறுவது மட்டுமே நம் இலக்கு அதனை நோக்கி செல்ல வேண்டும். இந்த சட்டமன்ற தேர்தலில் வாய்ப்பு கிடைக்காதவர்கள் சோர்வடைய வேண்டாம்.
சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படும் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கான நேர்காணலின் போது அவர் இவ்வாறு கூறினார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கான நேர்காணல் நடைபெற்றது. சட்டமன்ற தேர்தலில் அஅதிமுக சார்பில் போட்டியிட சுமார் 8250 பேர் விண்ணப்பித்துள்ளனர். விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணலை கட்சியின் ஆட்சிமன்ற குழு நேர்காணலை நடத்தியது. அதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவைத்தலைவர் துணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்டோர் விருப்ப மனு கொடுத்தவர்களிடம் நேர்காணல் நடத்தினர்.

தங்கள் பெயரில் விருப்ப மனு அளித்தவர்கள் மட்டுமே நேர்காணலுக்கு அனுமதிக்கப்பட்டனர். நேர்காணலுக்கு வந்தவர்கள் செல்போன் , கைப்பை கொண்டு செல்லக்கூடாது , முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என அறிவுறுத்தபட்டது. ஒரு பேட்சுக்கு நான்கு மாவட்டங்கள் என்ற வீதத்தில் நேர்காணல் நடத்தப்பட்டது. ஒரு பேட்சுக்கு 15 நிமிடங்கள் மட்டுமே நேரம் ஒதுக்கப்பட்டது. நேற்று ஒரே நாளில் நேர்காணல் நடத்தப்பட்டது காலை 9 மணிக்கு தொடங்கிய நேர்காணல் நள்ளிரவு வரை நீடித்தது. அப்போது பேசிய இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, தலைமை அறிவிக்கும் வேட்பாளர்களை அனைவரும் மனமுவந்து ஏற்றுக் கொண்டு அவர்களின் வெற்றிக்கு பாடுபட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

ஒரு தொகுதிக்கு பலர் விண்ணப்பித்திருந்தாலும் ஒருவரை மட்டுமே தேர்வு செய்ய இயலும் எனவும், கட்சி தலைமை அறிவிக்கும் வேட்பாளரை மற்ற அனைவரும் முழு மனதோடு ஆதரித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்ற அவர், தற்போது வாய்ப்பில்லாதவர்களுக்கு தகுதியில்லை என்ற அர்த்தமில்லை எல்லாருக்கும் பிறகு வாய்ப்பிருக்கிறது. வெற்றி பெறுவது மட்டுமே நம் இலக்கு அதனை நோக்கி செல்ல வேண்டும். இந்த சட்டமன்ற தேர்தலில் வாய்ப்பு கிடைக்காதவர்கள் சோர்வடைய வேண்டாம். ஏன் எனில் அவர்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
