வரும் சட்டமன்ற தேர்தலில் முற்றிலும் உழைப்பவர்களுக்கு, புதியவர்களுக்கு போட்டியிட வாய்ப்பு கொடுங்கள் என தமிழாய்வாளரும், இலக்கிய பேச்சாளருமான நெல்லைக்கண்ணன் தெரிவித்துள்ளார்.

கடந்த  2019 டிசம்பர் 29 ஆம் தேதி திருநெல்வேலி மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் நடத்திய குடியுரிமை திருத்த சட்ட விளக்க பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற நெல்லை கண்ணன், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை அவதூறாக பேசியதாக கைதாகி பின்னர் ஜாமீனில் விடுதலை ஆனார். இந்நிலையில்  பாஜகவின் ஏவல் அரசாக  தமிழக அரசு  செயல்படுகிறது எனவும்,  தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பாஜகவின் கையாள் எனவும் அவர் கடுமையாக விமர்சித்து வருகிறார். 

இந்நிலையில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றிபெற வேண்டும் என்ற தனது விருப்பத்தை அவர் வெளிபடுத்தியுள்ளார். வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் அதிக இடங்களை கேட்டுப் பெற முயற்சித்துவருகிறது. இந்நிலையில் இதுகுறித்து  தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி  எங்களுக்கு தேவையான இடங்களை திமுக தலைமையிடம் கேட்டுப் பெறுவோம் என கூறியுள்ளார். இந்நிலையில் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து  பதிவிட்டுள்ள நெல்லை கண்ணன்,  இந்த முறையாவது புதியவர்களாக, உழைப்பவர்கள் ஆக நிறுத்துங்கள். திமுக ஆட்சிக்கு இடையூறு ஆக்கிவிடாதீர்கள் என காங்கிரசை எச்சரித்துள்ளார். 

தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:  வேண்டிய இடங்களை கேட்போம் என்கிறார் கே எஸ் அழகிரி, யாருக்கு வேண்டிய சீட் என்ற வினா எழுகின்றது. திராவிட இயக்கங்களின் தயவிலேதான் இவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆனார்கள். அதற்குப் பின்னரும் கூட இவர்கள் வெற்றி பெற்ற இடங்களில் காங்கிரசை வளர்த்தார்களா எனில் இல்லை. முற்றிலும் புதியவர்களாக, உழைப்பவர்களாக நிறுத்துங்கள். திமுக வெற்றிக்கு இடையூராக ஆகிவிடாதீர்கள். என அவர் பதிவிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சிக்காரரான நெல்லை கண்ணன், இந்த முறை எப்படியோனும்  திமுக வெற்றி பெற்று விட வேண்டும் என்ற தனது ஆதங்கத்தை வெளிபடுத்தியுள்ளார்.