திமுகவின் செயற்குழு பொதுக்குழு மேடைகளில் ஆறு பேரில் ஒருவராக அமரக்கூடிய அளவிற்கு உயர் பொறுப்பு வகிப்பவர்தான் இந்த வி.பி.துரைசாமி. அவருடைய திடீர் அரசியல் நடவடிக்கைகள் தான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் வி.பி.துரைசாமி, பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ளார். அதில், திமுக தலைவர் ஸ்டாலின், ஜாதி அரசியல் செய்வதாகவும் அவரை சுற்றியுள்ளவர்களின் பேச்சை மட்டும் தான் கேட்பதாகவும் அதிரடியாக குற்றம்சாட்டியுள்ளார்.

வி.பி.துரைசாமியின் இந்த குற்றச்சாட்டுகள் திமுகவினரிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தனக்கு எம்.பி. பதவி வேண்டும் என மன்றாடி பார்த்தும் தலைமை அசைந்துக்கொடுக்கவில்லை என தெரிவித்துள்ளார். இந்நிலையில் வி.பி.துரைசாமியைப் போலவே, திமுகவில் அதிருப்தியில் இருப்போர், கட்சிப் பணிகளிலிருந்து ஒதுங்கி இருப்போர் போன்றோரை வளைக்கவும் பாஜக மேலிடம் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வராமல் தடுக்க வேண்டும் என்பதில் பாஜக மேலிடம் முனைப்பாக உள்ளது. அதற்கேற்ப திமுகவுக்கு எதிராக பல காய்களை பாஜக நகர்த்திவருவதாகவும் கூறப்படுகிறது. அதில், அதிருப்தி திமுக நிர்வாகிகளை வளைப்பதும் ஒன்று. அதில் முதல் ஆளாக முக்கிய பொறுப்பில் இருந்த வி.பி.துரைசமி சிக்கியதாகக் கூறப்படுகிறது.


திமுக துணை பொதுச்செயலாளரே அதிருப்தியில் கட்சி மாறிய நிலையில் ஐபேக் நிறுவனத்தின் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோரின் நடவடிக்கையை எதிர்த்து பல முக்கிய தலைவர்கள் அதிருப்தி அடைந்து வருகிறார்கள். இந்நிலையில் திமுகவில் அதிருப்தியில் உள்ள ஆறு மாவட்ட செயலாளர்கள் பிஜேபியில் இணைவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.