தமிழகத்தில் பிப்ரவரி 8ம் தேதி முதல் 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 10 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. இதனையடுத்து, ஜனவரி 19ம் தேதி முதல் 10 மற்றும் 12ம் வகுப்புகள் திறக்கப்பட்டது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் பள்ளிகள் திறப்பிற்குப் பின் மாணவர்களுக்கு பெரியளவில் பாதிப்பு ஏற்படவில்லை. 2  மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில், இன்று தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில்;- 9,1ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் பிப்ரவரி 8ம் தேதி முதல் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தொடங்க அனுமதிக்கப்படுகிறது. விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், கலை அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், வேளாண்மை, மீன்வளம், கால்நடை உள்ளிட்ட அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைகழகங்களில் இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கான (பட்டய படிப்பு உட்பட) அனைத்து வகுப்புகளும் பிப்ரவரி 8ம் முதல் தொடங்கவும், மாணவர்களுக்காக விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.