இரண்டு முறை ஊரடங்கு உத்தரவுக்கு பிறகு நாடு முழுவதும் 3 வது முறை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள முதல் நாள் ஒயின்ஷாப் திறக்கப்பட்டதால் குடிமகன்கள் அலை அலையாக திரண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

டெல்லியில் மதுபானக் கடைகளை திறக்க அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டு இருந்தார். அதன்படி இன்று மதுபானக்கடைகள் அங்கு திறக்கப்பட்டன. இதனையடுத்து குடிமகன்கள் மொத்தமாக ஒன்று திரண்டு மதுபாட்டில்களைவாங்கிச் சென்றனர்.

முன்னதாக கொரோனாவுடன் வாழ மக்கள் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும் என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்து இருந்தார். இதுகுறித்து அவர், ”டெல்லியில் மீண்டும் மக்கள் நடமாட்டத்துக்கு அனுமதிக்கும் நேரம் வந்துவிட்டது. நாம் அனைவரும் கரோனா வைரஸுடன் வாழ்வதற்கு தயாராகிக் கொள்ள வேண்டும். நூறு சதவீதம் கரோனா நோயாளிகள், வைரஸ் இல்லாத சூழலில்தான் டெல்லியில் மக்கள் நடமாட்டத்தை அனுமதிக்க வேண்டும என்றால் அது சாத்தியமில்லை. நாம் அவ்வாறு வாழவும் முடியாது. வைரஸ் இல்லாத இடம் எங்குமில்லை.

தற்போது டெல்லியில் உள்ள 11 மாவட்டங்களை சிவப்பு மண்டலமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால், தனிமைப்படுத்தப்பட்ட பகுதி மட்டுமே சிவப்பு மண்டலமாகவும் மற்ற பகுதிகளில் மக்கள் நடமாட்டத்துக்கு அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளோம்.

4-ம் தேதி முதல் கட்டுப்பாடுகள் தளர்வுடன் டெல்லி மக்கள் அன்றாட வாழ்க்கையைத் தொடங்கலாம். அதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இன்னும் இரு வாரங்களுக்கு லாக்டவுன் நீடித்தாலும் சில விதிமுறைகளில் தளர்வு தந்துள்ளோம்.

கரோனா வைரஸால் அரசுக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு அரசுக்கு ரூ.3,500கோடி வருவாய் கிடைத்தது. ஆனால் இந்த ஆண்டு ஏப்ரலில் ரூ.300 கோடிதான் கிடைக்கும். ஏறக்குறைய 10 மடங்கு இழப்பை அரசு சந்தித்துள்ளது.

மக்களின் நலனுக்காக கட்டுப்பாடுகளைத் தளர்த்தி அவர்களை நடமாட அனுமதித்துள்ளோம். இதைத் தவறாகப் பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுவெளியில் எச்சில் துப்புதல் அசுத்தம் செய்தால் கடும் தண்டனை விதிக்கப்படும். இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை மக்கள் வெளியே நடமாட அனுமதிக்கப்படமாட்டார்கள்.

தி்ங்கள் முதல் அனைத்து தனியார், அரசு அலுவலகங்கள் திறக்க அனுமதிக்கப்படும். 33 சதவீத ஊழியர்களுடன் பணியாற்றலாம். டெல்லியில் பேருந்து, மெட்ரோ ரயில், விமானப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதிப்பு குறைவாக இருக்கும் இடங்களில் கட்டுப்பாடுகளுடன் 150 மதுக்கடைகள் திறக்கப்பட உள்ளன.

 

அத்தியாவசியப் பொருட்களை சப்ளை செய்யும் இ-காமர்ஸ் வர்த்தகம் தொடர்ந்து டெல்லியில் அனுமதிக்கப்படும். ஷாப்பிங் மால், திரையரங்கம், சந்தைகள், சலூன்கள் மூடப்படும். அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் திறக்கப்படும். அத்தியாவசியமில்லாத தனிக்கடைகள் திறக்கலாம், ஆனால் குறைந்த அளவு பணியாளர்கள் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கையோடு பணியாற்ற வேண்டும்'' எனத் தெரிவித்துள்ளார்.