அதிமுகவிற்கு தென்மாவட்டங்களில் முக்கிய பிரமுகர்களில் ஒருவராக இருந்தவர் நயினார் நாகேந்திரன். 2001 மற்றும் 2011 தேர்தல்களில் அங்கு வென்ற நயினார் நாகேந்திரன் 2006 மற்றும் 2016 தேர்தல்களில் சொற்ப வாக்குகளில் வெற்றி வாய்ப்பை தவறவிட்டவர். 2011-2006 அதிமுக ஆட்சியின் போது அமைச்சராக இருந்தவர் நயினார் நாகேந்திரன். 2011 தேர்தலில் வென்று எம்எல்ஏவாக இருந்தாலும் அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படவில்லை. அதே சமயம் 2016ல் அவருக்கு மறுபடியும் வாய்ப்பு கொடுக்கப்பட்டும் நெல்லை தொகுதியில் நயினார் நாகேந்திரன் தோல்வி அடைந்தார்.

கட்சியில் தான் ஓரம்கட்டப்பட்டதற்கு சசிகலா தான் காரணம் என்று நயினார் நம்பினார். இதனால் தான் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு 2017ம் ஆண்டு நயினார் பாஜக சென்றார். தற்போது நயினார் நாகேந்திரன் பாஜகவின் மாநில துணைத் தலைவராக உள்ளார். மேலும் பாஜக மாநிலத் தலைவர் பதவிக்கான போட்டியிலும் நயினார் நாகேந்திரன் பெயர் இருந்தது. எப்படியும், அவர் தான் தலைவராக வருவார் என்று பேச்சுகள் அடிபட்டன. ஆனால் கடைசி நேரத்தில் பாஜக தலைமை மாநில தலைவர் பதவியை ஏஎல் முருகனுக்கு வழங்கியது.

இதனால் நயினார் நாகேந்திரன் பாஜக தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாக கூறுகிறார்கள். மாநில தலைவர் பதவி கிடைத்தால் மட்டுமே தனக்கு பாஜகவில் எதிர்காலம் என்று நயினார் நம்பிக் கொண்டிருந்தார். ஆனால் அந்த பதவி கிடைக்காத நிலையில் கட்சியில் அடுத்து தனக்கு என்ன எதிர்காலம் என்று நயினார் யோசிக்க ஆரம்பித்துள்ளார். இதற்கிடையே திமுக தலைமை நயினார் நாகேந்திரனை அணுகியதாக சொல்கிறார்கள். திமுக துணைப் பொதுச் செயலாளரை பாஜக கட்சியில் சேர்த்த நிலையில் அதற்கு பதிலடியாக துணைத் தலைவராக உள்ள நயினாரை தங்கள் பக்கம் இழுக்க திமுக முயற்சித்தது.

ஆனால் திடிரென இந்த முடிவை நயினார் ஒத்திவைத்துவிட்டார். பாஜக மேலிடம் கொடுத்த சில வாக்குறுதிகளால் திமுக பக்கம் செல்லும் முடிவை நயினார் தற்போதைக்கு கைவிட்டுவிட்டதாக கூறுகிறார்கள். அதே சமயம் நயினார் நாகேந்திரன் மீண்டும் அதிமுகவிற்கு வரவிரும்புவதாக ஒரு தரப்பு கூற ஆரம்பித்தது. இதனை ஏற்று நயினார் நாகேந்திரன் அதிமுகவிற்கு வர வேண்டும் என்று அமைச்சர் உதயகுமார் வெளிப்படையாக அழைப்பு விடுத்தார். இதே பாணியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் நயினார் நாகேந்திரன் அதிமுகவிற்கு வந்தால் ஏற்க தயாராக உள்ளதாக கூறியுள்ளார்.

அமைச்சர் உதயகுமார், பாஜக துணைத் தலைவர் நயினார் நாகேந்திரனை அழைத்தது பெரிய விஷயம் இல்லை. ஆனால் முதலமைச்சரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமியே நயினார் நாகேந்திரனை அழைத்திருப்பது தான் முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.பொதுவாக கூட்டணியில் உள்ள இரண்டு கட்சிகளில் இருந்து நிர்வாகிகள் பரஸ்பரம் அந்தந்த கட்சிகளில் சேருவதில்லை. உதாரணமாக தற்போது அதிமுக – பாஜக கூட்டணியில் உள்ளன. இந்த சூழலில் அதிமுகவில் இருந்து முக்கிய பிரமுகர்கள் பாஜகவிற்கு வரவிரும்பினால் அதனை கட்சி தலைமை ஊக்குவிக்காது. இதே போல் பாஜகவில் உள்ள முக்கிய நிர்வாகிகள் அதிமுகவிற்கு வர விரும்பினால் அதனை அதிமுக தலைமை விரும்பாது.

ஆனால் இதற்கு மாறாக பாஜகவின் துணைத் தலைவராக உள்ள ஒருவரை அதிமுகவிற்கு வந்தால் வரவேற்போம் என்று முதலமைச்சர் கூறியிருப்பது பாஜகவிற்கு ஏதோ ஒரு தகவலை முதலமைச்சர் சொல்ல விரும்புவதன் வெளிப்பாடு என்கிறார்கள். ஏற்கனவே பாஜக- அதிமுக உறவில் விரிசல் விழுந்துள்ளதாக பேச்சுகள் எழுந்துள்ளன. இந்த சூழலில் பாஜகவின் மூத்த நிர்வாகியை அதிமுகவிற்க வரவேற்பது அந்த கட்சியுடன் அதிமுக கூட்டணியை தொடர உண்மையில் விரும்புகிறதா என்கிற கேள்வியை எழுப்புகிறது.