அரசாணையின் அடிப்படையில் தமிழ்தகுதித்தேர்வு நடைபெறும் என அறிவித்துள்ளது. இந்த தகுதி தேர்வில் 80 மதிப்பெண்களுக்கு தமிழ் தொடர்பான கேள்விகள் கேட்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக காவல்துறை தேர்வில் தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி. புதிய நடைமுறையை தமிழக சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அரசு பணிகளில் சேர்வதற்கு தமிழ் தகுதி கட்டாயம் என அறிவித்திருந்தார். அதனடிப்படையில் கடந்த டிசம்பர் மாதம் அரசு பணி நடத்தும் அனைத்து தேர்வு முகமைகளும் தமிழ் தகுதித்தேர்வு நடத்த வேண்டும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அந்த அடிப்படையில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் காவலர் தேர்வுகளில் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. 

அரசாணையின் அடிப்படையில் தமிழ்தகுதித்தேர்வு நடைபெறும் என அறிவித்துள்ளது. இந்த தகுதி தேர்வில் 80 மதிப்பெண்களுக்கு தமிழ் தொடர்பான கேள்விகள் கேட்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியாக நடத்தப்படும் இந்த தமிழ்த்தகுதி தேர்வு 1 மணி நேரம் 20 நிமிடங்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் குறைந்தபட்சம் 40 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறுவது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு ஏற்கனவே நடத்தப்படும் காவலர் எழுத்து தேர்வு, உடற்தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்க்கும் பணி உள்ளிட்டவை வழக்கம்போல் நடைபெறும் என சீருடை பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. 

தமிழ்த் தகுதி தேர்வில் பெறப்படும் மதிப்பெண்கள் காவலர் பணியில் தேர்ந்தெடுப்பதற்கு கணக்கில் கொள்ளப்பட மாட்டாது. இந்த தகுதித்தேர்வு தமிழ் தெரிந்த தகுதியான நபர்களா என தெரிந்து கொள்வதற்கான தேர்வு மட்டுமே என்றும், இதன் மதிப்பெண்கள் தரவரிசை பட்டியலில் இடம்பெற கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளது. தமிழ்த்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அடுத்தக்கட்ட காவலர் முக்கிய தேர்வை விடைத்தாள் திருத்தப்படும் எனவும் சீருடை பணியாளர் தேர்வாணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.