காவிரி டெல்டா மாவட்டங்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலாமாக அறிவிக்க தனிச் சட்டம் இயற்றப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவித்ததை வரவேற்கிறோம். என பூவுலகின் நண்பர்கள் அமைப்பு மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.  இது குறித்து அந்த அமைப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:-   ஹைட்ரோகார்பன் திட்டங்களை உறுதியாக அனுமதிக்கமாட்டோம் என்கிற அறிவிப்பும் தமிழகத்தின் உணவு உற்பத்தி மண்டலத்தை பாதுகாக்க போராடும் மக்களின் நீண்டநாள் கோரிக்கையாகும். 

தமிழ்நாட்டின் உணவு பாதுகாப்பிற்கு இந்த அறிவிப்பு நிச்சயம் நன்மை பயக்கும் என்று நம்புகிறோம். முதலமைச்சர் அறிவிப்போடு நிறுத்தாமல், அமைச்சரவையை கூட்டி இதற்கான அவசர சட்டத்தை பிரகடனப்படுத்த வேண்டும்.  சட்ட வல்லுநர்களை கலந்தாலோசித்து உடனடியாக சட்டமன்றத்தை கூட்டி சட்டத்தை இயற்றவேண்டும் என்றும் கோருகிறோம்.  மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு நீண்ட நாட்களாக வலியுறுத்திவரக்கூடிய விஷயம், 

போராடும் மக்கள் பத்தாண்டுகளாக முன்வைத்து வரும் கோரிக்கையை ஏற்றி அறிவிப்பை வெளியிட்ட தமிழக முதலமைச்சருக்கு  வாழ்த்துக்களையும் நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த அறிவிப்பை செயல்படுத்தும் முதல் செயலாக, மீத்தேன் மற்றும் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிராக போராடிய மக்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப்பெற கோருகிறோம்.