Onion price hike
ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வரும் வெங்காயத்தின் விலையை உடனடியாக குறைப்பது தங்களது கைகளில் இல்லை என்றும், அடுத்து வெங்காய அறுவடை நடந்தால்தான் விலை குறைய வாய்ப்பு உள்ளதாகவும் மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக வெங்காயத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. அதன் விலையை கேட்டாலே பொது மக்களின் கண்களில் கண்ணீர் பெருகி ஓடும் அளவுக்கு உள்ளது.

மார்க்கெட்டில் பெரிய வெங்காயம் கிலோ 60 ரூபாய் முதல் 70 ரூபாய் வரைக்கும் விற்பளை செய்யப்படுகிறது, சின்ன வெங்காயம் ஒரு கிலோ 120 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்பளை செய்யப்பட்டு வருகிறது.
இதன் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் மத்திய உணவு, நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான், இது குறித்து உயர் அதிகாரிகளின் கூட்டத்தை கூட்டி டெல்லியில் ஆலோசனை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான், வெங்காயம், தக்காளி ஆகியவற்றின் விலை உயர்வுக்கு தேவைக்கும், சப்ளைக்கும் உள்ள இடைவெளிதான் காரணம் என தெரிவித்தார்.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு வெங்காயம் உற்பத்தி செய்கிற மாநிலங்களில் விதைப்பு குறைவாகத்தான் நடந்துள்ளது என்றும் .வெங்காய விலையை உடனடியாக குறைப்பது என்பது தங்களது கைகளில் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
அதே நேரத்தில் காரீப் பருவ வெங்காய அறுவடை நடந்த பின்னர், அதன் விலை குறையத் தொடங்கும் என்றும் ராம் விலாஸ் பாஸ்வான் கூறினார்.
