ஜார்கண்ட், ஹரியானா, மகாராஷ்டிரா, டெல்லி ஆகிய நான்கு மாநிலங்களில்  அடுத்த 3 மாதங்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.  முதல் கட்டமாக மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த முறை 2014ல் இந்த தேர்தல் அறிவிப்பு இதே மாதம் தான் நடைபெற்றது. அக்டோபர் மாதம் 15ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு, அக்டோபர் மாதம் 19ம் தேதி முடிவு அறிவிக்கப்பட்டது. இந்த முறை அக்டோபர் 20ஆம் தேதிக்கு பிறகு தேர்தல் நடத்துவதற்கான தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
 
ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய இரண்டு மாநிலங்களிலும் மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஒரு மிகப்பெரிய முனைப்புடன் பாஜக காய்களை நகர்த்தி வருகிறது. அதே போல் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கிடைத்த படுதோல்வியை சரி செய்வதற்கான வழியாக எதிர்க்கட்சிகள் இந்த தேர்தலை ஒரு வாய்ப்பாக பார்க்கின்றனர். எனவே இந்த இரண்டு மாநிலங்களுக்குமான தேர்தல் தேதிகள் இன்றைய தினம் அறிவிக்கப்படுவதற்கு வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது.

இது தவிர ஜார்கண்ட் மாநிலத்தை பொருத்தவரை நக்சல்கள் அதிகம் ஆதிக்கம் செலுத்தும் பகுதி. அந்த மாநிலத்தை பொறுத்தவரை பொதுவாகவே மூன்றிலிருந்து ஐந்து கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும். எனவே அந்த வகையில் அந்த மாநிலத்துக்கான தேர்தல் தேதி இன்றைய தினம் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலும் அடுத்த மாதமோ அல்லது இன்னும் ஒரு 45 நாட்கள் கழித்து இந்த தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. அதன் அடிப்படையில் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் இந்த தேதிகள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை தொடர்ந்து டெல்லி சட்டமன்ற தேர்தல் பிப்ரவரி மாதத்திற்குள் டெல்லி மாநிலத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். சட்டமன்ற தேர்தல் அதற்கான அறிவிப்புகள் இன்றைய தினம் வருவதற்கு மிக குறைவு. அதற்கான சமிக்கைகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற விஷயத்தை மையமாக வைத்து இந்த அறிவிப்பும் வெளியாகலாம். மொத்தமாக  தேர்தலை நடத்தினால் தேர்தல்  செலவினங்கள் குறையும் என்று இந்திய தேர்தல் ஆணையம் கருதுகிறது. எனவே அதன் அடிப்படையில் டெல்லி தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகலாம்  இல்லை என்றால் ஜார்கண்ட் மாநில தேர்தலுடன் சேர்த்து டெல்லி மாநிலத்துக்கு தேர்தல்நடைபெறலாம்.

அதே போல தமிழகத்தில் காலியாக இருக்க கூடிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.  நாங்குநேரி , விக்கரவாண்டி ஆகிய 2 தொகுதிகளில் தேர்தல் வரும் டிசம்பர் மாதத்திற்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும். அதாவது ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டால் அடுத்த ஆறு மாதத்திற்குள் அந்த தொகுதியில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது அடிப்படை விதி அந்த அடிப்படையில் இன்றைய தினம் அதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரே நாடு , ஒரே தேர்தல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு 4 மாநில சட்டப்பேரவை தேர்தல் மற்றும் ஒரு மாநில இடை தேர்தல் என 5 மாநில தேர்தல் அறிவிப்பு வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது.