கடந்த 12ம் தேதி நடைபெற இருந்த ஆர்கே நகர் இடைத் தேர்தலில் அதிமுக இரு அணிகளும் மோதின. இரு தரப்புமே இரட்டை இலை சின்னத்தை கோரியது. இதனால், ஏற்பட்ட சிக்கலில் தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைத்தது. மேலும், தனித்தனி சின்னங்களை வேட்பாளர்களுக்கு கொடுத்தது.

இதற்கிடையில், பணம் பட்டுவாடா செய்வதாக எழுந்த புகாரின்பேரில் இடைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை மீட்க தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்ததாக டிடிவி.தினகரன் கைது செய்யப்பட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரத்தில், ஹவாலா பணம் கைமாறியது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த ஹவாலா ஏஜென்ட் நரேஷ் என்பவரை இன்று காலை தாய்லாந்தில் இருந்து திரும்பியபோது, டெல்லி விமான நிலையத்தில் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

இந்நிலையில், விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட நரேஷிடம் நடத்திய விசாரணையில், தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் மேலும் ஒரு ஹவாலா ஏஜென்ட் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார், மற்றொரு ஹவாலா ஏஜென்ட்டையும் அதிரடியாக கைது செய்துள்ளனர். நரேஷ் மற்றும் மற்றெரு ஏஜென்ட் ஆகியோரை ரகசிய இடத்தில் வைத்து தீவிரமாக விசாரிக்கின்றனர். இந்த வழக்கில் மூத்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளும் சிக்குவார்கள் என தெரிகிறது.