one day budget is rs 100 crore which should be distributed to voters in rk nagar

ஆர்.கே.நகரில் மீண்டும் தேர்தல் ரத்து செய்யப் படும் என்ற எதிர்பார்ப்பு அனைத்து மட்டத்திலும் எழுந்துள்ளது. 

ஆர்.கே.நகரில் பணம் தண்ணீராய் பாய்கிறது என்கிறார்கள். இன்று ஒரே நாளில் ரூ. 100 கோடி அளவுக்கு வாரி இறைக்கத் திட்டமிட்டு களத்தில் இறங்கினார்களாம்.

ஆளும் தரப்பில் இருந்து ஆர்.கே.நகரில் வாக்குக்கு தலா ரூ.6000 வரை கொடுப்பதாக தகவல் வெளியானது. இப்படி, பணப்பட்டுவாடா புகார்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் போர்க்களமானது. இத்தகைய சூழ்நிலைகளால், ஆர்.கே.நகர் தேர்தல் ரத்தாகும் என்று பல தரப்பிலும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில், இந்தப் பணப் பட்டுவாடாவுக்கு முக்கியக் காரணமாக இருந்தது, முன்னாள் எம்.பி. பாலகங்கா என்கிறார்கள். 

முன்னாள் எம்பி. பாலகங்கா அடையாள அட்டையுடன் 300 க்கும் மேற்பட்டோர் தலா ரூ. 6000 பணம் பெற்று சென்றதாகக் கூறப்படுகிறது. இப்படி, ஒரு ஓட்டுக்கு ரூ.6,000 பெற்றுக் கொண்டு, ஆர்.கே. நகர் காவல் நிலையம் எதிரே உள்ள வீடு ஒன்றில் இருந்து தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

வீட்டில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வந்த தகவலை அடுத்து பறக்கும் படையினர் அந்த வீட்டில் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில், ஆர்.கே.நகர் சிறப்பு தேர்தல் அதிகாரியிடம் பணப்பட்டுவடா குறித்து திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி புகார் மனு அளித்துள்ளார். அவர் அளித்த புகார் மனுவில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் பணப்பட்டுவாடா செய்வதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போதுள்ள தேர்தல் அதிகாரிகள் பணப்பட்டுவாடாவை தடுக்க தவறிவிட்டனர் என்றும், கூடுதல் சிஆர்பிஎஃப் வீரர்கள், பறக்கும் படையினரை பணியமர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒருபுறம் வெறுமனே பண விநியோகம் நடப்பதாக புகார்கள் வந்து கொண்டிருக்க, இன்னொரு புறம் குக்கர்களுடன் கூடுமான வரையில் பணம் கொடுக்கப் படுவதாக செய்திகள் உலா வருகின்றன. 

இத்தகைய சூழலில் கோடிக்கணக்கில் பணம் எப்படி வருகிறது என்று அதிகாரிகள் ஆச்சரியத்தில் வாய் பிளந்து நிற்கின்றனராம். எல்லாம் மணல் கொள்ளையர்களிடம் இருந்து வருகிறது என்று காதைக் கடிக்கிறார்கள் எதிர்த்தரப்பினர்

ஆக, ஆர்.கே.நகரில் தேர்தல் புயல் அடிக்கிறது... பண மழை கொட்டுகிறது...

அதிமுக முன்னாள் எம்.பி.பாலகங்காவின் எழும்பூர் வீட்டில் வைத்து பண விநியோகம் நடைபெற்றதாகவும், நீண்ட வரிசையில் நின்று மக்கள் பணத்தை பெற்றுச் செல்வதாகவும் புகார்கள் கூறப்பட்டுள்ளன. 

இதனிடையே, பண விநியோகத்தில் ஈடுபட்டதாக, தினகரன் ஆதரவாளர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டதால், அதைக் கண்டித்து, மணலியில் அவரது ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்திக் கலைத்தனர். 

இன்னும் இரண்டு நாட்களில் எல்லாம் தெரிந்துவிடும். ஆர்.கே.நகரில் ஜெயிக்கப் போவது யாரு என்பதை விட, ஜெயிக்கப் போவது தேர்தல் ஆணையமா? அல்லது வேட்பாளர்களா என்பதுதான்!