கமலின் தூண்டிலில் நடிகர் ரஜினிகாந்த் சிக்க மாட்டார் என அதிமுக  துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனிசாமி கூறியுள்ளார். சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மாநிலம் முழுவதும் அதிமுக தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் அரூர் அடுத்த சூளகிரி மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினரும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான கே.பி முனுசாமி கலந்துகொண்டார். அப்போது தேர்தல் வியூகங்கள் குறித்து அவர் கட்சித் தொண்டர்கள் மத்தியில் அவர் பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:  உலகம் முழுக்கும் இருக்கும் தமிழர்கள் எம்ஜிஆரின் சொந்தங்கள் தான். ஆனால் வாரிசு என்று வருகிறபோது கழகத்தில் உள்ள ஒன்றரை கோடி தொண்டர்கள் தான் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் வாரிசுகள். 

ஆனால் மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் அரசியலில் நடிகர் ரஜினிகாந்த்தோடு இணைந்து செயற்பட தயார் என கூறியிருக்கிறார். ஆனால் அதை ரஜினிகாந்த்  சொல்லவில்லை, கமலஹாசன் மீன் கிடைக்குமா என தூண்டில் போடுகிறார், ரஜினிகாந்த் ரொம்ப அனுபவம் உள்ளவர், கமலஹாசனின் தூண்டிலில் ரஜினிகாந்த் சிக்கமாட்டார். இவ்வாறு அவர் கூறினார்.