once stalin stopped dinakaran started said palanisamy

அதிமுக ஆட்சி கவிழ்ப்பை பற்றி பேசிவந்த எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், தற்போது அதுகுறித்த பேச்சை நிறுத்திவிட்டார். தற்போது தினகரன் பேசிவருகிறார். அவரும் கூடியவிரைவில் நிறுத்திவிடுவார் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய பழனிசாமி, எங்களை துரோகிகள் என்கிறார்கள். ஹவாலா பார்முலாவை அறிமுகப்படுத்தியவர்தான் துரோகி. உழைக்காமலேயே முன்னுக்கு வந்தவர் என்றால் அது தினகரன் மட்டும்தான். எந்த உழைப்பும் கிடையாது. அவரது குடும்பத்தை சேர்ந்த ஒருவர்(சசிகலா) ஜெயலலிதாவுடன் இருந்து உதவி செய்தார். அவர் மூலம் கொல்லைப்புறமாக வந்தவர் தான் தினகரன். ஹவாலா பார்முலாவை வைத்து வெற்றி பெற்று விட்டார் தினகரன். ஆனால், நாங்கள் அத்தனை பேரும் உழைத்து முன்னுக்கு வந்து இந்த பதவியை அடைந்திருக்கிறோம்.

ஸ்லீப்பர் செல்கள் என்ற ஒரு விஷயத்தை தினகரன் புதிதாக கண்டுபிடித்திருக்கிறார். அதிமுகவில் இருக்கிற அத்தனை பேரும் ஆட்சி தொடர வேண்டும் என நினைப்பவர்கள் தான். ஆட்சி நீடிக்க வேண்டும் என நினைக்கும் பத்தர மாட்டு தங்கமாக விளங்குபவர்கள்தான் எங்களுடன் உள்ளனர். எங்களிடத்தில் இருப்பவர்கள் உழைப்பால் உயர்ந்தவர்கள். உங்களைப்போல் குறுக்குவழியில் வந்தவர்கள் அல்ல. கிரிமினல்களுக்குத்தான் கிரிமினல்தனமான எண்ணங்கள் எல்லாம் வரும். கொஞ்ச நாட்கள் தான் ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ பதவியை தினகரனால் அனுபவிக்க முடியும். அதன்பிறகு ஆண்டவன் பார்த்துக்கொள்வான். எங்களை வீழ்த்த வேண்டும் என செயல்பட்ட திமுகவை மக்கள் வீழ்த்திவிட்டார்கள். டெபாசிட் கூட பெறமுடியவில்லை. 

பட்ஜெட் வரை அரசு நீடிக்கிறதா என்பதை பார்ப்போம் என ஸ்டாலின் விமர்சித்தார். பட்ஜெட்டை தாக்கல் செய்தோம். அதன்பின்னர், மானியக் கோரிக்கை வரை ஆட்சி நீடிக்கிறதா என பார்ப்போம் என்றார். அதையும் நடத்தினோம். அதன்பிறகு, ஆட்சி கலைப்பு சாத்தியமில்லை என்பதை உணர்ந்த ஸ்டாலின் ஆட்சி கலைப்பு குறித்த விமர்சனத்தை நிறுத்திவிட்டார். அவர் நிறுத்தியதும் தற்போது தினகரன் ஆட்சி கலைப்பு குறித்து பேசிவருகிறார். மார்ச் மாதத்துக்குள் ஆட்சி கலைக்கப்படும் என தினகரன் கூறியிருக்கிறார். அதற்குள் நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்பதை பார்ப்போம் என மிரட்டும் தொனியில் முதல்வர் பேசியுள்ளார்.