டீ-சர்ட், ஜீன்ஸில் வருகை தந்துள்ள ராகுல்காந்தியும், உதயநிதி ஸ்டாலினும் ஒரே மேடையில் அமர்ந்து அவனியாபுரம் ஜல்லிக்கட்டை கண்டு ரசித்தனர்.

பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் மதுரை மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முதல் ஜல்லிக்கட்டு பொங்கல் பண்டிகையான இன்று அவனியாபுரத்தில் வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்று வருகிறது.

போட்டியை பார்க்க ராகுல்காந்தி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்தார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் அவர் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் அவனியாபுரம் பகுதிக்கு வந்தார். தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை ராகுல்காந்தி நேரில் பார்த்து ரசித்தார். அவருடன் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அருகில் இருந்து போட்டியை பார்த்தார். இருவரும் சிறிது நேரம் ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாக பேசிக்கொண்டனர். 

ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு ரசித்த ராகுல் காந்தி எம்பி மேடையில் பேசுகையில்;- தமிழக மக்களுக்கு வணக்கம், ஜல்லிக்கட்டில் பங்கேற்றது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழ் கலாசாரம், பாரம்பரிய இந்தியாவிற்கு இன்றியமையாதது. அது மதிக்கப்பட வேண்டும். தமிழக மக்களுடன் நின்று அவர்களின் வரலாற்றை பாரம்பரியத்தை காக்கவேண்டியது என் கடமை. உங்களது உணர்ச்சிகளையும், கலாசாரத்தையும் ரசித்து பாராட்டவே வந்துள்ளேன் என்றார். ஜல்லிக்கட்டை கண்டு ரசித்த ராகுல்காந்தி 30 நிமிடங்களுக்கு பிறகு புறப்பட்டு சென்றார். இதனையடுத்து, சட்டமன்ற தேர்தல் தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் ராகுல் ஆலோசனை நடத்த உள்ளார்.