செப் 22ஆம் தேதி இரவு ஜெயலலிதா தம்மிடம் உதவி கேட்டதாகவும் அதேபோல படுக்கையில் ஜெயலலிதா மயங்கி விழுந்ததாகவும்  ஆறுமுகசாமி கமிஷனில் சசிகலா தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016 ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதியன்று உடல்நலக்குறைவினால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி டிசம்பர் 5ஆம் தேதியன்று மரணமடைந்தார். 

அப்பல்லோவில் சிகிச்சையில் இருந்த  75 நாட்களும் யாரையுமே சசிகலா பார்க்க விடவில்லை எனவும் அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் அதிமுகவில் இருப்பவர்களே குரல் எழுப்பிய நிலையில் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மத்தை விசாரிக்க முதல்வர் பழனிச்சாமி ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து உத்தரவிட்டார். ஜெயலலிதாவுக்கு நெருங்கியவர்கள், அமைச்சர்கள், சசிகலா குடும்பத்தினர் இந்த ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்து வருகின்றனர். 

ஜெ., மரணம் பற்றி விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் இதுவரை சசிகலா நேரில் ஆஜராகவில்லை ஆனால் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளார். 55 பக்கங்களை கொண்ட அந்த பிரமாண பத்திரத்தில் பல்வேறு தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், செப்டம்பர் 22 ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு போயஸ் கார்டன் வேதா இல்லத்தில் ஜெயலலிதா தவறி விழுந்ததாகவும், பாத்ரூமில் தவறிவிழுந்ததும் தம்மிடம் உதவி கேட்டதாக தெரிவித்துள்ள சசிகலா, ஜெயலலிதாவை கைத்தாங்கலாக படுக்கைக்கு கொண்டுவர தான் உதவியதாகவும், படுக்கையில் ஜெயலலிதா மயங்கி விழுந்ததாகவும் கூறியுள்ளார். 

உடனடியாக டாக்டர் சிவகுமார் உட்பட 2 பேர் கொண்ட மருத்துவர்கள் வீட்டுக்கு வந்து சிகிச்சை அளித்ததாக கூறியுள்ளார்.

மேலும், ஜெயலலிதாவின் பாதுகாவலர் 2 பேர் மற்றும் கார் ஓட்டுநர் உடனடியாக அழைக்கப்பட்டதாகவும் அப்பல்லோவுக்கு தகவல் கூறியபின் ஆம்புலன்ஸ் வந்ததாகவும் மருத்துவமனைக்கு செல்வதற்கு முன் ஜெயலலிதா வீட்டில் மயங்கிய நிலையில் இருந்ததாகவும் ஆம்புலன்ஸில் ஏற்றிய பின் சுயநினைவுக்கு திரும்பியதாக  அதில் கூறப்பட்டுள்ளது.