உத்தரப் பிரதேசத்தில் சில கெடுபிடி  நடவடிக்கைளை அமல் படுத்துவதில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கில்லாடி. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக, அம்மாநிலத்தில் உள்ள  மாவட்ட நீதிமன்றங்கள், காவல் துறை தலைமையகங்களில் உயரதிகாரிகள் சரியான நேரத்தில் பணிக்கு வருவதில்லை என்று புகார்கள் எழுந்து வந்தன.

இதையடுத்து  இன்று யோகி ஒரு புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அதில் மாவட்ட நீதிபதிகள் (மாவட்ட ஆட்சியர்கள்), காவல் துறை அதிகாரிகள் உட்பட மாவட்டத் தலைமையகங்களில் பணியாற்றும் அதிகாரிகள் அனைவரும் தினமும் காலை 9 மணிக்குள்  பணிக்கு வர வேண்டும்.

அவ்வாறு வராதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கான தண்டனை அன்றைய நாளுக்குரிய சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என அந்த உத்தரவில் தெரிவித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள் காலை 9 மணியிலிருந்து 11 மணி வரையில் மக்களை சந்திக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

ஆனால் அதிகாரிகள் தரப்பில் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கால் எப்போது வர வேண்டும் என்று சொன்ன முதலமைச்சர்  மாலை எப்போது நாங்கள் வீட்டுக்கு செல்லலாம் என்பதையும் அறிவிக்க வேண்டும் என அதிகாரிகள் கேட்டுள்ளனர். இந்த உத்தரவு அதிகாரிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.