தமிழகம் முழுவதும் இன்று புதன்கிழமை நவம்பர் 25ம் தேதி நிவர் புயல் எச்சரிக்கையை முன்னிட்டு அரசு பொது விடுமுறை விடப்படுவதாக முதல்வா் எடப்பாடி.பழனிசாமி அறிவித்துள்ளார்.

"சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பேரிடா் மேலாண்மை கட்டுப்பாட்டு மையத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சென்று ஆய்வு செய்தார். அதன் பிறகு  செய்தியாளா்களுக்கு முதல்வா் பழனிசாமி அளித்த பேட்டியில்..  "கன மழை, புயல் காரணமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆட்சியா்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் அளிக்கப்பட்டுள்ளன. பாதிப்புக்குள்ளாகும் இடங்களில் தனிக் கவனம் செலுத்த வேண்டுமென உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்படும் மக்களைத் தங்க வைக்க 3,346 இடங்களில் நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கடலூா், அரியலூா் மாவட்டங்களைச் சோ்ந்த தாழ்வான பகுதிகளில் வசிப்போர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனா். புயல் வரும்போது மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். தேவையில்லாமல் வெளியே செல்லக் கூடாது. ஏழு மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

அரசு அலுவலகங்களுக்கு புதன்கிழமையன்று நவம்பர்.25 விடுமுறை விடப்படுகிறது. அத்தியாவசியப் பணிகளில் ஈடுபடுவோர் மட்டும் அலுவலகங்களுக்கு வருவார்கள்.புயலால் மக்கள் பாதிக்காத அளவுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன". என்றார்.