கேரளாவில் இளைஞர் ஒருவர் தான் வேலை செய்யும் இடத்தில் இருந்து போனஸ் பணத்தைப் பெற்றுக் கொண்டு வரும்போது , அவரை வழிப்பறி செய்ததாக கூறி போலீஸ் லாக்-அப்பில்  அடித்து, உதைத்துக் கொன்ற 2 போலீசாருக்கு சிபிஐ நீதிமன்றம் அதிரடியாக தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. இதற்கு உடந்தையாக இருந்த 3 காவல் அதிகாரிகளுக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம் அருகே கரமனை, நெடுங்காடு பகுதியைச் சேர்ந்த பிரபாவதியம்மாவின் மகன்  உதயகுமார், அங்குள்ள  இரும்புக்கடை ஒன்றில், சுமை தூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.

கடந்த 2005-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி இரவு உதயகுமாரும், அவரது நண்பர் சுரேஷ்குமார் என்பவரும் ஸ்ரீகண்டீஸ்வரம் பூங்கா பகுதியில் நடந்து சென்றபோது, வழிபறியில் ஈடுபடுவதாக கூறி சந்தேகத்தின் பேரில், பிடித்த போலீசார், விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அப்போது, உதயகுமார் கையில் வைத்திருந்த 4 ஆயிரம் ரூபாய் பற்றி போலீசார் கேட்டுள்ளனர். அதற்கு, ஓணம் பண்டிகைக்காக கடை உரிமையாளர் அளித்த போனஸ் எனக் உதயகுமார் கெஞ்சி மன்றாடியும், அதை  நம்பாமல், வழிப்பறி செய்த பணம் தானே எனக்கூறி, போலீசார் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதில் நிலைகுலைந்த உதயகுமார், பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தனது மகனை போலீசார் அடித்தே கொன்றுவிட்டதாக கூறி, உதயகுமாரின் தாயார் பிரபாவதியம்மா, காவல்துறையில் புகார் அளித்தார்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்படாததால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், உதயகுமாரின் லாக்-அப் மரணம் குறித்து விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து, விசாரணை நடத்திய சிபிஐ, திருவனந்தபுரம் கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜித்தாகுமார், பொது காவல் அதிகாரி ஸ்ரீகுமார், தலைமை காவலர் சோமன், DSP அஜீத்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ஷாபு, ஹரிதாஸ் ஆகிய 6 காவல் அதிகாரிகள் மீது ஆவண ஆதாரங்களுடன் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது… இந்த வழக்கு பல ஆண்டுகளாக நடைபெற்ற வந்த நிலையில், நேற்று முன்தினம்  6 பேரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து  நேற்று  தண்டனை விவரங்களை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி நசீர் அறிவித்தார். உதவி ஆய்வாளர் ஜித்தாகுமார், பொது காவல் அதிகாரி ஸ்ரீகுமார் ஆகியோருக்கு தூக்கு தண்டனையும், தலா 2 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

தலைமை காவலர் சோமன் இறந்துவிட்டதால் அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவதாக தெரிவித்த நீதிபதி, DSP அஜீத்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ஷாபு, ஹரிதாஸ் ஆகிய மூவருக்கும், தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். போலீசார் இருவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருப்பது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.