அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட ஓ.பி.எஸ்ன் சகோதரர் ஓ.ராஜா ஆவின் சேர்மன் பதவியை தக்கவைக்க திமுகவில் இணையப் போவதாக பரபரப்பு கிளம்பி உள்ளது.  

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தானைத் தம்பியான ஓ.ராஜா, நேற்று முன்தினம் மதுரை ஆவின் சேர்மனாக பதவியேற்ற  சில மணி நேரத்தில் அதிமுகவில் இருந்து  அதிரடியாக நீக்கப்பட்டார். இது அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பானது. அண்ணன் ஓபிஎஸ் பெயரை பயன்படுத்தி, தேனி மாவட்டத்தில் ஓ.ராஜா தனி ராஜாங்கமே நடத்தி வந்திருக்கிறார். ஜெயலலிதா காலத்திலேயே அப்போது கட்சி தலைமையிடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஓ.ராஜா மீது பூசாரியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கு விசாரணையில் தொங்கிக் கொண்டிருக்கிறது. மணல், மரம் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து என அடுக்கடுக்கான புகார்கள்  தலைமைக்கு வந்தபோதும் ஒரு நடவடிக்கையும் பாயவில்லை. 

தற்போது நீக்கப்பட்ட காரணமாக அதிமுக முக்கிய நிர்வாகிகள் கூறும்போது, ‘‘ஆவின் சேர்மன் பதவியை கைப்பற்றுவதற்காக ஓ.ராஜா, ஆவின் இயக்குனர்களில் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களையும் தன்பக்கம் இழுத்து சேர்மனாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இதனை அறிந்த ஆவின் சேர்மன் பதவியை கேட்டு வந்த ஓபிஎஸின் நண்பர் செல்லமுத்து கடும் கோபத்திற்கு ஆளாகி இருக்கிறார். தன்னை ஓபிஎஸ் ஏமாற்றியதாக கூறி, வேறு கட்சிக்கு  மாறப்போவதாக பகிரங்கமாகவே அதிமுகவினரிடம் குமுறியுள்ளார். 

டி.டி.வி ஆதரவாளர்களை கொடைக்கானல் அழைத்துச் சென்று, ஒரு ரிசார்ட்டில் ஓ.ராஜா தங்க வைத்திருந்ததையும் புட்டுப்புட்டு வைத்துள்ளார். இதனையறிந்த அமைச்சர்கள் செல்லூர் ராஜூவும், உதயக்குமாரும் சமாதானப்படுத்தியும் பயனில்லை. முதல்வர் எடப்பாடி வரை தகவல் சென்றது. பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களுடன் ரகசிய ஒப்பந்தம் போட்டு, ஆவின் சேர்மனாக ஓ.ராஜா வெற்றி பெற்றார். இந்த தில்லாலங்களை அறிந்து நேரடியாகவே முதல்வரிடம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். ஓ.பன்னீர்செல்வத்துடன் பேசிய எடப்பாடி, கட்சியின் ஒற்றுமையைக்  காப்பதற்காக கட்டாயம் ஓ.ராஜாவை நீக்க வேண்டும் என்று சில ஆதாரங்களை சொல்லி இருக்கிறார். அதற்கு, ‘பேசி சரிப்படுத்துவோம்’ என்று கூறி வந்த ஓபிஎஸ், கடைசியில் வேறு வழியின்றி ஓ.ராஜாவை கட்சியில் இருந்து  நீக்குவதற்கான உத்தரவில் கையெழுத்திட்டு விட்டார்’’ என்கிறார்கள். 

ஓ.ராஜா ஆதரவாளர்களோ அதிர்ச்சி குண்டை தூக்கிப்போடுகின்றனர். ’’ஓ.பி.எஸ்- ஈபிஎஸ் இருவரும் சேர்ந்து எடுத்த இந்த முடிவில், உடனடி மாற்றம் இருக்காது. இதனால். அதிமுகவில் இனி இருந்தால் செல்வாக்கு இருக்காது என்ற முடிவுக்கு வந்த ஓ.ராஜா அதிரடி முடிவுக்கு வந்துவிட்டார். ராஜாவின் நீண்ட காலம் ஆசையே ஆவின் தலைவர் பதவி தான். தற்போது அதிமுக கட்சியில் இருந்து தூக்கினாலும் அண்ணன் ஆவின் தலைவராகவே நீடிப்பார். 

அதற்கான மறைமுக வேலையில் ஈடுபட்டு வருகிறார். ஏற்கெனவே டி.டி.வி அணியில் உள்ள இயக்குநர்கள் தமக்கு சாதகமாக இருக்கும் நிலையில், தி.மு.கவில் உள்ள இயக்குநர்களின் ஆதரவை பெற்று சேர்மன் பதவியை தக்க வைக்க முயற்சி செய்து வருகிறார். அதோடு ராஜாவை நம்ப வைத்து ஏமாற்றி விட்டதால் அதற்கு பழிக்குப்பழியாக கூடிய விரைவில் திண்டுக்கல்லில் உள்ள திமுக துணைபொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஐ.பெரியசாமி முன்னிலையில் ஒ.ராஜா தலைமையில் ஆயிரக்கணக்கானோர் திமுகவில் இணைய போவதற்கான பேச்சுக்கள் நடந்து வருவதால் கூடிய விரைவில் ஓ.ராஜா, ஐ.பி. முன்னிலையில் திமுகவில் சேரப் போகிறார். அதன் மூலம் இந்த மாவட்டத்தில் உள்ள ஓபிஎஸ்சின் செல்வாக்கும் ஒட்டுமொத்தமாக சரிய போகிறது’’ என பரபரப்பு கிளப்புகிறார்கள்.