அமெரிக்காவுக்கு செல்லும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு ரைசிங் ஸ்டார் விருது வழங்கப்பட உள்ளது.


துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 10 நாட்கள் அரசுமுறை பயணமாக அமெரிக்கா செல்கிறார். சென்னையிலிருந்து நாளை (8ம் தேதி) முதல் நவம்பர் 17 வரை இந்தப் பயணத்தை மேற்கொள்கிறார். இந்தப் பயணத்தின் போது அமெரிக்காவில் சிகாகோ, ஹூஸ்டன், வாஷிங்டன் டிசி, நியூயார்க் உள்ளிட்ட நகரங்களுக்கு ஓ.பன்னீர் செல்வம் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். நவம்பர் 9-ம் தேதி சிகாகோ தமிழ்ச் சங்கம் சார்பில் நடைபெறும் குழந்தைகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஓ.பன்னீர்செல்வம் பேசுகிறார். நவம்பர் 13 மற்றும் 14-ல் வாஷிங்டன் டிசியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொள்கிறார். நவம்பர் 17 அன்று அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்புகிறார். 
இந்தச் சுற்றுப்பயணத்தின்போது அங்கே வீட்டு வசதி திட்டங்கள் செயல்படுத்தப்படுவது பற்றியும், பெரு நகரங்களில் செயல்படுத்தப்படும் கட்டுமான திட்டங்கள் பற்றியும் ஓ.பன்னீர்செல்வம் பார்வையிடுகிறார். மேலும் இந்தச் சந்திப்பின்போது துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சர்வதேச ரைசிங் ஸ்டார் விருது - ஆசியா என்ற விருது வழங்கப்பட உள்ளது. American Multi Ethnic Coalition Inc என்ற அமைப்பு இந்த விருதை வழங்குகிறது.
இரு மாதங்களுக்கு முன்பு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமெரிக்கா, லண்டன், துபாய் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதேபோல அவருக்கு அண்மையில் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது அமெரிக்கா செல்லும் துணை முதல்வருக்கு அங்கேயே சர்வதேச விருது வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.