மறைந்த ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தை தமிழக அரசு தவறாக வழி நடத்துவதாகவே கருத வேண்டி உள்ளது என்று டிடிவி தினகரன் அணியின் செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் ஜெயலலிதாவின் அரசு செயலாளர்கள், உதவியாளர்கள், பாதுகாவலர்கள், கார் டிரைவர்கள், போயஸ் கார்டனில் வசித்தவர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் நேற்று விசாரணை ஆணையத்தில் ஆஜர் ஆனார். அவரிடம் ஜூன் 2 ஆம் தேதிக்கு விசாரணை ஆணையத்தில் ஆஜராகுமாறு கூறி அனுப்பி விட்டனர்.

இந்த நிலையில், ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் நேற்று டாக்டர் சிவக்குமார் தாக்கல் செய்த ஜெயலலிதா, தனது கைப்பட எழுதிய உணவு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் ஜெயலலிதா தனது கைப்பட எழுதிய மருத்துவ குறிப்புகளையும் மற்றும் ஜெயலலிதா மூச்சுத் திணறலுடன் கடைசியாக பேசிய ஆடியோ ஒன்றையும் அவர் தாக்கல் செய்தார். அந்த வீடியோவில், அதிகாலை 5.05 மணி முதல் 5.35 மணிக்குள் காலை உணவு காலை 5.45-க்கு க்ரீன் டீ, காலையில் 4 இட்லி மற்றும் பிரட், மதிய உணவு 2 மணிக்கு வழங்க வேண்டும். மதிய உணவாக பாசுமதி அரிசி வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியதாக தெரிவித்தார். 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் தேதி அவர் 106.9 கிலோ எடை இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜெயலலிதா பேசிய ஆடியோவில், மூச்சுத்திணறல் தியேட்டரில் விசிலடிப்பது போல உள்ளது என மூச்சை வேகாமாக இழுத்து விட்டுக் கொண்டே சொல்கிறார். பேசுவதற்கு முன்பாக இரண்டுமுறை இரும்புகிறார், சக்கரை அளவு 140/80 உள்ளது. இது எனக்கு பரவாயில்லை என இருமலுடன் பதில் சொல்லுகிறார். இதனையடுத்து, டாக்டர்கள் பரிசோதனைக்காக இரத்தம் எடுக்க முயற்சிக்கிறார்கள். அப்போது ஜெயலலிதாவோ ரத்தம் வரவில்லை என்றால் விட்டுவிடுங்கள் என சொல்கிறார்.

இந்த நிலையில், ஜெயலலிதாவின் கடைசி பேச்சு ஆடியோவை வெளியிட்ட விவகாரம் குறித்து தினகரன் அணியின் செய்தித் தொடர்பாளரான சி.ஆர்.சரஸ்வதி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆடியோ பேச்சு ஆஸ்பத்திரியில் பதிவு செய்யப்பட்டது. தங்களிடம் உள்ளதாக டாக்டர் சிவக்குமார் கடந்த ஜனவரி மாதம் விசாரணை ஆணையத்தில் தெரிவித்திருந்தார்.

அந்த ஆடியோவை விசாரணை ஆணையம் இதுவரை கேட்காமல் நேற்று திடீரென டாக்டர் சிவக்குமாரை வரவழைத்து வாங்கி உள்ளது. இந்த ஆடியோவை விசாரணை ஆணைய செயலாளர் பத்திரிகைகளுக்கு வெளியிட்டுள்ளார். ஆடியோவை வெளியிட செயலாளருக்கு அதிகாரம் கொடுத்தது யார்? என்ற கேள்வி எழுகிறது என்றார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஜெயலலிதாவின் வீடியோவை வெளியிட்டதற்கு வெற்றிவேல் எம்.எல்.ஏ. மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் இப்போது விசாரணை ஆணைய செயலாளரே ஆடியோவை வெளியிடலாமா? அவர் மீது வழக்கு பாயுமா? என்றும் கேள்வி எழுப்பினார். பொதுவாக விசாரணை ஆணைய தகவல்கள் அனைத்தையும் நீதிபதி தான் முதலமைச்சரை சந்தித்து கொடுப்பது வழக்கம். பின்னர் சட்டமன்ற கூட்டத்தில் வைக்கப்பட்டு அதன் விவரங்கள் மக்களுக்கு முறையாக தெரிவிக்கப்படும். இதுதான் நடைமுறை. ஆனால் இப்போது விசாரணை ஆணையத்தை எடப்பாடி பழனிசாமி அரசு தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகிறது என்று குற்றம் சாட்டினார்.

இதற்கு முன்பு சசிகலா பரோலில் வந்திருந்தபோது கொடுத்த பிரமாண பத்திர அபிடவிட் விவரங்களையும் இதே விசாரணை ஆணைய செயலாளர்தான் பத்திரிகைகளுக்கு வெளியிட்டார். அன்றைய தினம் நீதிபதி விடுமுறையில் இருந்தார். அப்படி இருக்கையில் செயலாளர் அதை பிரித்து பார்த்து பத்திரிகைக்கு கொடுப்பது எந்த வகையில் நியாயம்? எனவே விசாரணை ஆணையத்தை அரசு தவறாக வழி நடத்துவதாகவே கருத வேண்டி உள்ளது.

ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு தரப்பினர் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தால் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் அன்றைய தினம் முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தை இதுவரை விசாரணை ஆணையம் அழைத்து விசாரிக்கவில்லை என்றும் அப்போலோ மருத்துவமனைக்கு வந்த அனைத்து அமைச்சர்களையும் விசாரணை ஆணையம் ஏன் விசாரிக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.

சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சிகிச்சை விவரங்கள் அனைத்தும் தெரியும். அவரை ஏன் விசாரணை ஆணையம் விசாரிக்க மறுக்கிறது என்றும், விசாரணை ஆணையம் ஒருதலைபட்சமாகவே நடந்து கொள்வதாகவே கருத வேண்டியுள்ளது என்றும் சி.ஆர்.சரஸ்வதி கூறியுள்ளார்.