அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் எடப்பாடி பழனிச்சாமிக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் போட்டி உருவாகியுள்ளது. கடந்த ஆகஸ்ட் 15 அன்று அதிமுக மூத்த அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமியிடமும் ஓ.பன்னீர்செல்வத்திடமும் மாறிமாறி ஆலோசனை நடத்தி பரபரப்பை கிளப்பினர். சில தினங்களுக்கு முன்பு அதிமுக தலைமையகத்தில் நடந்த அவசர ஆலோசனை கூட்டத்திலும் முதல்வர் வேட்பாளர் குறித்த சர்ச்சை ஏற்பட்டுள்ளது. மேலும் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைப்பதில் எடப்பாடி பழனிச்சாமிக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் மோதல் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இதனையத்து அதிமுக செயற்குழுவை வரும் 28-ம் தேதி கூட்டி, அதில் முதல்வர் வேட்பாளர், வழிகாட்டுதல் குழு அமைப்பது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கலாம் என்ற முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் துணை முதல்வரும் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று மாலை 7 மணியளவில் தனியாக கட்சி அலுவலகத்துக்கு வந்தார். அவருடைய ஆதரவாளரான எம்.எல்.ஏ. செம்மலையும் உடன் வந்திருந்தார். இரு தினங்களுக்கு ஒரு முறை கட்சி அலுவலகத்துக்கு வந்து தொண்டர்களையும் நிர்வாகிகளையும் சந்திக்கப்போவதாக ஓ.பன்னீர்செல்வம் ஏற்கனவே கூறியிருந்தார்.
அதன்படி கட்சி தலைமை அலுவலகத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் வந்ததாகவும் அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் செயற்குழு கூட்ட ஏற்பாடுகளைக் கவனிக்கவும், செயற்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பிதழ் அனுப்புவது தொடர்பாக கட்சியின் தலைமையகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஓ. பன்னீர்செல்வம் அறிவுரை வழங்கிசென்றதாகவும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.