2011ம் ஆண்டிலிருந்து தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடந்துவருகிறது. 2016 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த நிலையில், அதே ஆண்டு டிசம்பரில் ஜெயலலிதா மறைந்தார். இதையடுத்து பல்வேறு அரசியல் சதுரங்க விளையாட்டுகள் அரங்கேறிய நிலையில், இறுதியில் ஈபிஎஸ்-ஓபிஎஸ் இணைந்து ஆட்சியையும் கட்சியையும் காப்பாற்றி, 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்துவிட்டனர். 

அடுத்த தேர்தல் நெருங்கும் நிலையில், அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து அமைச்சர்கள் கடந்த சில தினங்களாக முன்னுக்குப்பின் முரணாக பேச, இப்போதே அதிமுகவில் சர்ச்சை வெடிக்க தொடங்கிவிட்டது. 

2021 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் ஆட்ட்சியமைக்கும் சூழல் உருவாகும்பட்சத்தில், எம்.எல்.ஏக்கள் இணைந்து முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்வார்கள் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவிக்க, அதற்கு முற்றிலும் முரண்பட்ட கருத்தை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமி தான் நிரந்தர முதல்வர் என்றார். 

அமைச்சர்களின் முரண்பட்ட கருத்து பொதுவெளியிலும் ஊடகங்களிலும் பேசுபொருளாகவும் விவாத பொருளாகவும் மாறியது. இதையடுத்து அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டது. இதுகுறித்து இன்று கூட, கேபி.முனுசாமி, அமைச்சர் சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர். ஈபிஎஸ்-ஓபிஎஸ் இணைந்து ஆட்சிப்பணியை, அமைச்சர்களின் ஒத்துழைப்புடன் சிறப்பாக செய்துவருகின்றனர். முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து சரியான நேரத்தில் முடிவு செய்து அறிவிக்கப்பட்டும் என்று கேபி. முனுசாமி தெரிவித்திருந்தார். 

இந்த விவகாரம், அதிமுகவில் சலசலப்பையும், அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தை அம்பலப்படுத்தும் விதமாகவும் அமைந்தது. இந்நிலையில், இதுகுறித்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓபிஎஸ் கருத்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள ஓபிஎஸ், தொடர்ந்து 3-வது முறையாக 2021-ஆம் ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவது ஒன்றே அ.இ.அ.தி.மு.கவின் இலக்கு. அதுவே மாண்புமிகு அம்மா அவர்களின் கனவு. அதனை நனவாக்க கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் அனைவரும் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும் என்பது எனது அன்பு வேண்டுகோள்!

 

தாய்வழி வந்த 
தங்கங்கள் எல்லாம்
ஓர்வழி நின்று
நேர்வழி சென்றால்
நாளை நமதே என்று ஓபிஎஸ் பதிவிட்டுள்ளார்.