கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை சந்திப்பில் உள்ள முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் சிலையை மர்ம ஆசாமிகள் அவமதித்தனர். அண்ணாவின் சிலை அமைந்துள்ள பீடத்தில் காவிக்கொடிகளும் கட்டிவிட்டிருந்தனர். இந்தச் செயலுக்கு திக, திமுக, மதிமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். என அடுத்தடுத்து சிலைகள் அவமதிப்புக்குள்ளாதைச் சுட்டிக்காட்டி நடவடிக்கை  தேவை என்று அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தன.  

இந்நிலையில் அண்ணா சிலை அவமதிப்பு செய்யப்பட்டதற்கு அதிமுக கண்டனம்  தெரிவித்துள்ளது. துணை முதல்வரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் இதுதொடர்பாக  தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை சந்திப்பில் அமைந்துள்ள அண்ணாதுரை சிலையை மர்ம நபர்கள் அவமதிப்பு செய்தும் பீடத்தில் காவிக்கொடி கட்டியும் சென்ற செயலை வன்மையாக கண்டிக்கிறேன். விஷமிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி, கடுமையான நடவடிக்கையை அரசு விரைவில் எடுக்கும்.” என்று ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.