2,500 செவிலியர்கள் பணிநீக்கம் செய்த திமுக அரசு... மக்கள் விரோதச் செயல் என ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்!!
2,500 செவிலியர்களை பணியிலிருந்து நீக்கிய திமுக அரசின் செயலுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
2,500 செவிலியர்களை பணியிலிருந்து நீக்கிய திமுக அரசின் செயலுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பழைய ஓய்வூதியம், அகவிலைப்படி உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம்; ஊதிய முரண்பாட்டை களைய வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்; முந்தைய தி.மு.க. ஆட்சிக் காலத்தில் பிறப்பிக்கப்பட்ட ஆணையை அமல்படுத்துமாறு மருத்துவர்கள் போராட்டம்; விளை நிலங்கள் கையகப்படுத்தப்படுவதாக விவசாயிகள் போராட்டம்; உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பொதுத் துறை நிறுவனப் பணிகள் வெளிமுகமை மூலம் மேற்கொள்ளப்படுவதைக் கண்டித்து தற்காலிக ஊழியர்கள் போராட்டம் என தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடந்து கொண்டிருக்கின்ற நிலையில், புத்தாண்டு பரிசாக கொரோனா காலத்தில் பணி புரிந்து கொண்டிருக்கின்ற 2,500 செவிலியர்களை பணி நீக்கம் செய்து திமுக அரசு ஆணை பிறப்பித்திருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது.
இதையும் படிங்க: இந்த புத்தாண்டு மக்களுக்கு இனிய புத்தாண்டாக அமையட்டும்... பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து!!
சீனா, தென் கொரியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளி நாடுகளில் கொரோனா தொற்றின் அடுத்த அலை அபரிமிதமாக அதிகரித்துள்ள நிலையில், தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் கொரோனாத் தொற்றின் தாக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கின்ற நிலையில், அடுத்த 40 நாட்களில் கொரோனா தொற்றின் தாக்கம் உச்சகட்டத்தை அடையும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கின்ற நிலையில், எந்த நிலையையும் சமாளிக்கும் வகையில் மருத்துவக் கட்டமைப்புகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டுமென்று மத்திய அரசு மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை செய்திருக்கும் நிலையில், இவற்றையெல்லாம் புறக்கணித்துவிட்டு, மனம் போன போக்கில், கொரோனா காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட 2,500-க்கும் மேற்பட்ட செவிலியர்களை பணியிலிருந்து நீக்குவது என்பது முன்யோசனை இல்லாத செயல். நிர்வாகத் திறமையற்ற நடவடிக்கை. அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை மூன்றரை இலட்சம் என்று திமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டுகளில் தோராயமாக ஒரு இலட்சம் அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றிருக்கிறார்கள். கிட்டத்தட்ட 41/2 இலட்சம் காலிப் பணியிடங்கள் இருக்கின்றன.
இதையும் படிங்க: உலகத் தரத்தில் மதுரை ரயில் நிலையம்! தெற்கு ரயில்வே திட்டத்தின் கிராபிக் காட்சிகள்!
இந்த காலிப் பணியிடங்களை நிரப்புவதில் பெருத்த தாமதத்தை செய்து வருகிறது திமுக அரசு. இதன்மூலம் 42 இலட்சம் அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய சம்பளம் கோடிக்கணக்கில் மிச்சப்படுத்தப்படுகிறது. இது போதாது என்று, கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டிருக்கின்ற இந்த வேளையில், அதற்காகவே நியமனம் செய்யப்பட்ட 2,500 செவிலியர்களை பணியிலிருந்து நீக்கி திமுக அரசு ஆணை பிறப்பித்து, செலவை குறைத்துள்ளது. செலவை குறைக்கிறேன் என்ற போர்வையில் சேவையை குறைக்கும் திமுக அரசின் மக்கள் விரோதச் செயலுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற செயல்களை மேற்கொண்டு, அதன்மூலம் வருவாய்ப் பற்றாக்குறை குறைந்துவிட்டது, நிதிப் பற்றாக்குறை குறைந்துவிட்டது என்று வருகின்ற நிதிநிலை அறிக்கையில் பெருமை பேசிக் கொள்ள அரசு முயற்சிக்கிறது.
இதையும் படிங்க: மோகனூர் பட்டாசு விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம்... அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!
வருவாயைப் பெருக்கி அதன்மூலம் வருவாய்ப் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை, கடன் ஆகியவற்றை குறைக்க நடவடிக்கை எடுப்பதுதான் சிறப்பான பொருளாதாரக் கொள்கை. அதைவிட்டுவிட்டு மக்களின் வயிற்றில் அடித்து வருவாய்ப் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை, கடன் ஆகியவற்றை குறைப்பது என்பது தவறான பொருளாதாரக் கொள்கை. இந்தத் தவறான பொருளாதாரக் கொள்கையை தி.மு.க. அரசு கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்வதோடு, கொரோனா தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில், கொரோனா தொற்று மேலாண்மைக்காகவே பணியமர்த்தப்பட்ட செவிலியர்களை நீக்கம் செய்து பிறப்பிக்கப்பட்ட ஆணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். மக்களை வாழ் வைக்கத்தான் மக்களாட்சியே தவிர, மக்களை துன்புறுத்துவதற்கு அல்ல என்பதை மனதில் நிலைநிறுத்தி அதற்கேற்ப ஆட்சியை திமுக அரசு நடத்த வேண்டும். இல்லையெனில், துன்பத்தினால் மக்கள் விடும் கண்ணீர் திமுக குடும்ப ஆட்சியை விரைவில் வீழ்த்திவிடும் என்று தெரிவித்துள்ளார்.