துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கடந்த சில நாட்களாகவே தேனி மாவட்டத்தில் சுற்றுப் பயணம் செய்து வந்தார். இதையடுத்து  அவருக்கு முதுகு வலி  ஏற்பட்டது. ஆனால் வலி அதிகமாகவே  அவர்  கோவையில் உள்ள பிரபல மருத்துவமனையில் இப்போது ஆயுர்வேத சிகிச்சை பெற்று வருகிறார்.

கோவை கணபதி பகுதியில் இருக்கும் ஆரியவைத்திய ஃபார்மசி என்பது ஆயுர்வேத வைத்தியத்துக்குப் புகழ்பெற்ற இடம். பல்வேறு திரைப்பிரபலங்களும் அரசியல் புள்ளிகளும் இங்கேதான் சென்று மறுமலர்ச்சி சிகிச்சை எடுத்துக் கொள்வார்கள்.

ஓ.பன்னீர் செல்வம் ஏற்கனவே கடந்த ஆண்டு  டிசம்பர் மாதம் இந்த வைத்திய சாலைக்கு சென்று சிகிச்சை எடுத்தார். ஆறு மாதங்கள் கழிந்த நிலையில் தேனியில் இருந்து நேற்று புறப்பட்டு கோவைக்கு வந்து சேர்ந்தார். நேற்று, இன்று, நாளை என மூன்று நாட்கள் கோவையில் தங்கி ஆயுர்வேத சிகிச்சை எடுப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.