என்னை டேனியல் காந்தி என்று சொல்வது போல எச். ராஜாவை ஹிஸ்புல்லாஹ் ராஜா என்று சொன்னால் அவர் ஒப்புக் கொள்வாரா? நானும் அவரை மதம் மாற்றி அழைக்க முடியும். இஸ்லாமியர்கள் என்றால் தீயவர்கள் என்று செல்வதற்காக இப்படி நான் பேசவில்லை, ஒருவரின் உண்மை பெயரை மாற்றி பொய்யாக பரப்புரை செய்வது கீழ்த்தரமான அரசியல் என்பதற்காக சொல்கிறேன்.
மைக்கேல் பட்டியில் மதமாற்றம் நடந்துவிட்டது என கூறும் பாஜகவினர்தான் திருமுருகன் காந்தி என்ற தன் பெயரை டேனியல் காந்தி என கிறிஸ்தவ பெயராக மாற்றி பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதுவே ஒருவகையில் கட்டாய மதமாற்றம்தான், என் அனுமதியில்லாமல் என்னை பாஜகவினர் கட்டாய மத மாற்றம் செய்துள்ளனர் எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மே 17 இயக்கத்தின் ஒருங்கிணை ப்பாளர் திருமுருகன் காந்தி வலியுறுத்தினார். பாஜகவை எதிர்த்து கேள்வி கேட்பவர்கள் மீது கிறிஸ்தவ முத்திரை குத்தி மதமாற்றம் செய்யும் வேலையை பாஜக தலைவர்கள்தான் செய்து வருகின்றனர் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அரியலூர் மாவட்டம் வடுகபாளையம் கீழத் தெருவை சேர்ந்த முருகானந்தம் என்பவரின் மகள், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல் பட்டி என்ற ஊரில் தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்று வந்த நிலையில் சில காரணங்களுக்காக தற்கொலை செய்து உயிரிழந்துள்ளார். ஆனால் அவர் மதமாற்றம் செய்ய வருத்தப்பட்டார், அதனால் தான் தற்கொலை செய்து கொண்டார் என பாஜக தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதுதொடர்பாக அந்த மாணவி பேசிய வீடியோ ஒன்றையும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அதன் பின்னர் இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பூதாகரமானது. தூய இருதய மேல்நிலை பள்ளியில் கட்டாய மதமாற்றம் நடக்கிறது என பாஜகவினர் அடித்துக் கூறி வந்த நிலையில் திடீரென புதிய வீடியோ ஒன்று வெளியானது. அந்த வீடியோவில் பூச்சி மருந்து குடித்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அந்த மாணவி, எந்த இடத்திலும் தான் மதம் மாறச் சொல்லி வற்புறுத்த பட்டதாக கூறவில்லை.

கட்டாய மதமாற்றம் செய்ய வற்புறுத்தப் பட்டார் என்பதை அந்த மாணவி திட்டவட்டமாக மறுத்திருந்தார். அதேபோல அந்த பள்ளியில் இந்துமத அடையாளங்களில் ஒன்றான பொட்டு வைக்கக் கூடாது என பள்ளி நிர்வாகம் ஒருபோதும் தடுக்கவில்லை என்றும் அவர் கூறியிருந்தார். தன்னால் சரியாக தேர்வு எழுத முடியாததால்தான் தற்கொலை செய்து கொண்டதாகவும் அவர் அதில் கூறியுள்ளார். மொத்தத்தில் மதமாற்றம் செய்யச் சொல்லி மாணவியை எவரும் துன்புறுத்தவில்லை என்பது அதன் மூலம் தெளிவானது. தற்போது இந்த விவகாரம் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது. இதில் தலையிட்டுள்ள பாஜக தேசியத் தலைவர் ஜே.பி நட்டா உண்மையில் என்ன நடந்தது என விசாரிக்க நடிகையும் முன்னாள் எம்பியுமான விஜயசாந்தி உள்ளிட்ட நான்கு பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளார். இந்நிலையில் அந்த குழு நேரடியாக உயிரிழந்த மாணவியின் வீட்டிற்கே சென்று அவரின் பெற்றோர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

விசாரணைக்குப் பின்னர் செய்தியாளர்களை விஜயசாந்தி, இந்ந விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மௌனம் காப்பது ஏன் என்றும், அவர் யாரை காப்பாற்ற முயற்சிக்கிறார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.மொத்தத்தில் மாணவி விவகாரம் தமிழகத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. தமிழகத்தில் கட்டாய மதமாற்றம் நடந்து கொண்டு இருக்கிறது அதை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் பாஜக தலைவர்கள் சூளுரைத்து வருகின்றனர். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பல அரசியல் கட்சிகள் பல வகையில் கருத்து கூறி வருகின்றன. இந் நிலையில் இது குறித்து மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழகத்தில் மதமாற்றம் என்ற துருப்புச் சீட்டை வைத்து உத்தரப்பிரதேசத்தில் கலவரத்தை செய்ததை போல தமிழகத்திலும் நடத்த பாஜகவினர் முயற்சி செய்கின்றனர். அதனால் தான் தமிழகத்தில் மத மாற்றம் நடக்கிறது என்ற விஷயத்தை கையில் எடுத்துள்ளனர் எனக் குற்றம்சாட்டி உள்ளார்.
இதுதொடர்பாக யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியின் முழு விவரம் பின்வருமாறு:- மதமாற்றம் நடப்பதாக கூறும் பாஜகதான் என்னைப் போன்றவர்களையும் மத மாற்றியுள்ளது. எனது பெயர் திருமுருகன் காந்தி, திருமுருகன் என்பது எனது பெயர், காந்தி என்பது என் தந்தையின் பெயர். பள்ளிக்கூட ஆவணங்கள் முதல் நீதிமன்ற ஆவணங்கள் வரை திருமுருகன் காந்தி என்பது தான் என் பெயர். ஆனால் என்னுடைய பெயரை ஒரு கிறிஸ்தவ பெயராக டேனியல் காந்தி என கூறி பரப்புரை வேலையை பாஜக செய்து வருகிறது. இதுவும் ஒரு வகையில் கட்டாய மதமாற்றம் தான். எனது பெயரை என் அனுமதி இல்லாமல் கிறிஸ்தவமாக மாற்றியது பாஜக தலைவர்கள்தான், முதலில் அவர்களைதான் பிடித்து உள்ளே போட வேண்டும். இங்கிருக்கும் தலைவர்களை, பாஜகவை எதிர்த்து கேள்வி கேட்பவர்கள் மீது கிறிஸ்தவ முத்திரை குத்துவதை பாஜக வாடிக்கையாக வைத்துள்ளது.

என்னை டேனியல் காந்தி என்று சொல்வது போல எச். ராஜாவை ஹிஸ்புல்லாஹ் ராஜா என்று சொன்னால் அவர் ஒப்புக் கொள்வாரா? நானும் அவரை மதம் மாற்றி அழைக்க முடியும். இஸ்லாமியர்கள் என்றால் தீயவர்கள் என்று செல்வதற்காக இப்படி நான் பேசவில்லை, ஒருவரின் உண்மை பெயரை மாற்றி பொய்யாக பரப்புரை செய்வது கீழ்த்தரமான அரசியல் என்பதற்காக சொல்கிறேன். உயிருடன் இருக்கின்ற எனது பெயரையே மாற்றி பிரச்சாரம் செய்கிறது பாஜக. இப்படிப்பட்ட நிலையில் இறந்துபோன ஒரு மாணவியை வைத்து மதமாற்றம் நடந்துவிட்டதாக கூறிவருவது அயோக்கியத்தனம். மதமாற்றம் என்ற துருப்புச் சீட்டை வைத்து உத்திரப்பிரதேச மாநிலத்தில் கலவரம் செய்ததைபோல இங்கும் செய்ய வேண்டுமென திட்டமிடுகிறார்கள். அவர்களின் இந்தக் கலவரத்தை இங்கு அனுமதிக்க முடியாது. ஒருபோதும் தமிழ்நாடு அனுமதிக்கக்கூடாது. இதை எல்லா கட்சிகளும் இணைந்து எதிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் அறிவித்துள்ளார்.
