சமத்துவம், சகோதரத்துவம் என்று பேசக்கூடிய பொதுவுடைமை கட்சியினைச் சார்ந்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் ஆட்சியிலும் தமிழர்கள் பாராமுகத்துடன் நடத்தப்படுகிறார்களோ என்ற சந்தேகம் வருவதைத் தடுக்கமுடியவில்லை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விமான விபத்தில் இறந்தவர்களுக்கு கேரள அரசு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளது. ஆனால், அதே கேரள அரசு நிலச்சரிவில் குடும்பத்தோடு மடிந்த தமிழர்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் மட்டுமே அறிவித்துள்ளது. விமான விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறுவோரை கேரள முதல்வர், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் உடனடியாக கோழிக்கோடு மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்டனர். ஆனால், மூணாறில் சிகிச்சைப் பெற்று வரும் தமிழர்களைப் பார்க்க யாரும் செல்லவில்லை.


மத்திய பாஜக அரசு தமிழர்கள் பாதிக்கப்படும்போது பாரா முகத்துடன் நடந்துகொள்வது புதிதல்ல; வெள்ளம், மழை, புயல் என்று தமிழர்கள் எத்தகைய துயர துன்பத்திற்கு ஆளானாலும் அலட்சிய போக்குடன் நடந்துகொள்வது வாடிக்கையானதே. ஆனால், சமத்துவம், சகோதரத்துவம் என்று பேசக்கூடிய பொதுவுடைமை கட்சியினைச் சார்ந்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் ஆட்சியிலும் அதே போல் நிகழ்கிறதோ என்ற சந்தேகம் வருவதைத் தடுக்கமுடியவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக பின்வரும் கோரிக்கைகளை வைக்கிறேன்.


தமிழக அரசு, மூணாறு தேயிலைத் தோட்ட நிலச்சரிவு மீட்பு மற்றும் துயர் துடைப்புப் பணிகளில் கேரள மற்றும் மத்திய அரசுகளோடு தொடர்புகொண்டு அவர்களது செயல்பாடுகளைத் தொடர்ந்து கண்காணிப்பதுடன், உடனடியாகத் தேவையான உதவிகளையும் செய்ய வேண்டும். வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் பணிபுரியும் தமிழர்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய உடனடியாகத் தமிழக அரசு தனி அமைச்சகத்தை அமைக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என்று அறிக்கையில் சீமான் தெரிவித்துள்ளார்.