Asianet News TamilAsianet News Tamil

”இயன்றதை செய்வோம்..நெருக்கடியில் தவிக்கும் நம் இலங்கை சொந்தங்களுக்கு” - தமிழக மக்களிடம் சீமான் வேண்டுகோள் !

Seeman : பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஈழத்தமிழர்களுக்கு இயன்ற உதவியை செய்ய முன்வரவேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

NTK Co ordinator Seeman statement about eelam Tamils who are suffering from the economic crisis we are helping
Author
First Published Jun 4, 2022, 1:21 PM IST

இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஈழத்தில் இனப்படுகொலை நடந்து 13 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது இலங்கையில் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தைத் தவிர்க்க முடியாமல், அந்த நாடும், அந்த நாட்டு மக்களும் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள். நாம் பலமுறை சொன்னதுபோல, கார் இல்லையென்றோ, கைப்பேசி இல்லையென்றோ, குளிரூட்டி இல்லையென்றோ எந்த நாட்டிலும் புரட்சி வந்ததுமில்லை. ஆனால் நீரும், சோறும் இல்லாது போனால் எந்த நாட்டிலும் புரட்சி வராமல் இருந்ததுமில்லை.

அத்தகைய புரட்சி வெடிக்கும்போது ஆட்சியாளர்கள் அதை எதிர்நின்று எதிர் கொள்ளமுடியாமல் தப்பி வேறு நாட்டிற்கு ஓடிவிடுவது தான் வழக்கமாக வைத்துள்ளார்கள். அதுதான் இப்போது இலங்கையிலும் நடக்கிறது. இந்தச் சூழ்நிலையில் நாட்டுக்கு நாடு உறவு-உதவி என்கிற அடிப்படையில் மற்ற நாடுகளில் இருந்து பெறப்படும் உதவிகளை சிங்கள மக்களுக்கு, சிங்கள அதிகாரம் வழங்கி வருகிறது. ஆனால் ஈழத்தில் உள்ள நமது மக்கள் எவ்வித ஆதரவுமற்று, உயிர் வாழ்வதற்கான உணவுத் தேவைக்கே அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்திய ஒன்றிய அரசும் தமிழ்நாடு அரசும் கூட உதவிப் பொருட்களை இலங்கை அரசுக்கு அனுப்பி வருகிறது. ஆனால் அவை, தமிழர்களுக்கும் கிடைக்குமா என்றால்? உறுதியாகக் கிடைக்காது. 

NTK Co ordinator Seeman statement about eelam Tamils who are suffering from the economic crisis we are helping

அப்படியே அவர்கள் கொடுத்தாலும் பெயரளவில் 10 பேர்களுக்கு கொடுத்துவிட்டு, தமிழர்களுக்கும் நாங்கள் பகிர்ந்து கொடுத்தோம் என்று படத்தை எடுத்து வெளிப்படுத்தி, விளம்பரப்படுத்துவார்களே தவிர உளமார நம் மக்களுக்கு ஒரு பருக்கை அரிசி, பருப்பு கூடக் கொடுக்கமாட்டார்கள் என்பதே மறுக்கவியலா உண்மை. இச்சூழலில் தலைவர் நமக்குக் கற்பித்ததுபோல, உலகத்தில் நமக்கென்று குரல் கொடுக்கவோ நமக்கென்று கரம் நீட்டவோ எவருமற்ற நிலையில், தனித்து விடப்பட்ட இனத்தின் மக்கள் நாம், அப்படி இருக்கும்போது, நமக்கு இருக்கின்ற ஒரே வலிமை நமக்கு நாமேதான். அந்தவகையில் நம் மக்களுக்கு நாம்தான் உதவியாக நிற்க வேண்டிய தேவை உருவாகியுள்ளது. 

இதையும் படிங்க : "திராவிட மாடல் ஆட்சியில் 1 ஆண்டு கூட முடியல.. அதுக்குள்ள நாக்கு தள்ளுது.!" தெறிக்கவிட்ட அண்ணாமலை"

சிங்களவர்கள் எங்கள் மீது துளியளவு அன்பு வைத்திருந்தால் கூட எங்களுக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது. அவர்கள் கொடுப்பதாக இருந்தால் எப்போதோ எங்களுக்குக் கொடுத்திருக்க முடியும். நம் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வராமல், குறிப்பாகக் குழந்தைகளுக்கான பால் மாவு, அரிசி, பருப்பு, காய்கறிகள், எண்ணெய், மருந்து, மாத்திரைகள் என்று எதுவுமே உள்ளே வர விடாமல், எதுவுமே கிடைக்க விடாமல் உணவையே ஒரு ஆயுதமாக்கி, கருவியாக்கிப் போரிட்டார்கள். அப்படிப்பட்ட சிங்களவர்கள் தற்போதைய சூழலில் தமிழ் மக்களுக்கு உணவுப் பொருட்களைப் பகிர்ந்து தருவார்கள், உதவிகள் செய்வார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும் ? இன்றைக்கு சிங்கள மக்கள் இத்தகைய நெருக்கடியான நிலையை எதிர்கொள்ள இயலாமல் சிங்கள அரசுக்கு எதிராகவே கடும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

ஆனால் தமிழ் மக்கள் 35 ஆண்டுகளுக்கும் மேலாக இக்கொடுந்துன்பத்தை எதிர்கொண்டவர்கள். ஆண்டுக்கணக்கில் ஆழ்ந்த வேதனையையும், வலியையும் சுமந்திருப்பதனால்தான் இன்றைக்கு வடக்கு-கிழக்கு மாகாணங்களிலும் சரி, யாழ் மாவட்டத்திலும் சரி எமது மக்கள் அமைதி காக்கிறார்கள். ஏனென்றால் அமைதியை விடச் சிறந்த பதில் உலகத்தில் எதுவுமே இருக்க முடியாது. இங்கிருந்து இந்திய ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் அனுப்புகின்ற பொருட்களைச் சிங்கள அதிகாரம் தமிழ் மக்களுக்கும் பகிர்ந்து கொடுத்தால் அது வரவேற்கத்தக்கதும் நன்றிக்குரியதுமாகும். ஏனென்றால் அதில் எங்களுடைய வரிப்பணம் சேர்ந்திருக்கிறது. 

எங்கள் இனத்தைக் கொன்று குவித்தவர்களுக்கு, நாங்கள் செத்து விழுந்தபோது சிரித்து மகிழ்ந்தவர்களுக்கு, கைகொட்டிச் சிரித்து இனிப்பு கொடுத்து கொண்டாடியவர்களுக்குத்தான் அது போகிறது. இருப்பினும் நாங்கள் சிங்களவர்களைப் போல உணர்வும், உள்ளமும் படைத்தவர்கள் அல்லர். ஏனென்றால் தமிழர்கள் நாம் மனிதநேயவாதிகள் அல்லர் உயிர்மநேயவாதிகள். அந்த அடிப்படையில் யாருடைய துயரமும், யாருடைய கவலையும், கண்ணீரும் நமக்கு மகிழ்ச்சி தரக்கூடியதாக இருந்ததில்லை. அந்த அடிப்படையில் அவர்களுக்குக் கொடுப்பதையும் நாம் வரவேற்கிறோம். ஆனால் எமது மக்களுக்கு உதவிகள் சென்று சேருமா? என்றால் சேராது என்பதே எதார்த்த உண்மை.

NTK Co ordinator Seeman statement about eelam Tamils who are suffering from the economic crisis we are helping

இச்சூழ்நிலையில் உலகெங்கும் பரவி வாழ்கின்ற எனது அன்பிற்கினிய உறவுகள், என் உடன் பிறந்தார்கள், பேரன்புமிக்க எனது பெற்றோர்கள், என் பாசத்திற்குரிய தம்பி-தங்கைகள் என எல்லோரும் இணைந்து நம்மால் இயன்றதை, நம் மக்களுக்குச் சேகரித்து அனுப்ப வேண்டிய கடமை ஏற்பட்டுள்ளது. முன்பு போர்ச் சூழலின்போது, ஐயா பெரியவர் பழ.நெடுமாறன் அவர்கள் தலைமையில் பொருட்களைச் சேகரித்தோம். அவற்றை ‘வணங்காமண்’ கப்பல் மூலமாக அனுப்புவதாக இருந்தது. ஆனால் அன்றைய ஆட்சியாளர்களாக இருந்த, இந்திய ஒன்றியத்தை ஆண்ட காங்கிரஸ் அரசும், மாநிலத்தை ஆண்ட திமுக அரசும் இணைந்து அந்தப் பொருட்களை ஈழத்திற்கு அனுப்ப விடாமல் தடுத்துவிட்டது. பிறகு அந்தப் பொருட்கள் வீணாகிப் போய்விட்டது. அப்படி ஒரு சூழல் தற்போது இல்லை. 

உதவிப் பொருட்களை ஈழத்திற்கு எப்படிக் கொண்டுபோவது என்று அங்குள்ள பாராளுமன்ற உறுப்பினரிடம் பேசி முடிவெடுத்துள்ளோம். நாம் கொடுக்கின்ற உதவிப்பொருட்கள் நமது இரத்த சொந்தங்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கப்பபடும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பொருட்களை மட்டுமே அனுப்ப முடியும் என்ற எதார்த்த சூழல் உள்ளது. ஏனென்றால் அங்குள்ள அதிகாரம் எல்லாப் பொருட்களையும் உள்ளே அனுமதிக்காது.  அரிசி, பருப்பு வகைகள், எண்ணெய்வகைகள், இடியாப்ப மாவு, புட்டு மாவு, பால் மாவு, தேயிலை-குளம்பித் தூள், கோதுமை மாவு, உலர்ந்த பருப்பு வகைகள், பேரீச்சம்பழம் உள்ளிட்ட உலர்ந்த பழவகைகள், ரொட்டிகள் போன்ற எளிதில் கெட்டுப் போகாத உணவுகள் மற்றும் கருவாடு போன்ற அதிக நாட்கள் வைத்துப் பயன்படுத்தக்கூடிய உணவுப் பொருட்களையும் சேமித்து அனுப்பவிருக்கிறோம்.

எனவே பொருட்களை நேரடியாக வழங்கவோ கட்சித் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கவோ வாய்ப்புள்ளவர்கள் பொருட்களாக உதவுங்கள். மற்றவர்கள் நிதியாக உதவுங்கள். இப்பெரும் பணிக்கு நிதியுதவி மிகவும் அவசியம். ஏனென்றால், சேகரிக்கப்படும் இப்பொருட்களை இங்கிருந்து ஈழத்திற்குக் கப்பலில் கொண்டு செல்வதற்கான செலவு மிக அதிகம். இதற்கும் சேர்த்துதான் நாம் கையேந்தி நிற்க வேண்டியுள்ளது. எனவே இதனைக் கருத்திற்கொண்டு, எங்கள் பிள்ளைகள் உங்களிடத்தில் வந்து கையேந்தும்போது, கருணையோடு, நமது இனச் சொந்தங்களுக்கு உளமார்ந்து உதவுகிறோம் என்ற உணர்வோடு, நீங்கள் கொடுத்து உதவ வேண்டுமென்று அன்போடு வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.

மயில் குளிரால் நடுங்குகிறது என்று எண்ணி போர்வை போர்த்திய பெரும்பாட்டன் பேகனின் பேரன்களும்-பேத்திகளும், முல்லைக்கொடிக்குத் தேரை நிறுத்தி விட்டுப்போன பெரும்பாட்டன் பாரியின் வாரிசுகளும், நாட்டை ஆண்ட மன்னர்களே பெரும் கொடை வள்ளல்களாக இருந்தவர்களின் வழி வந்தவர்களாகிய நாம், காக்கை குருவி எங்கள் சாதி என்று பாடிய பெரும்பாவலன் பாரதி, வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று பயிருக்கும் உயிருக்கும் வாடிய வள்ளலார் பெருமகனார் போன்றோரின் வழி வந்தவர்களாகிய நாம், எல்லோரும் கல் மாவில் கோலம் போடும்போது, ஈக்கும், எறும்புக்கும் உணவாக இருக்கட்டுமென்று அரிசிமாவில் கோலம் போட்ட உயிர்மநேயமிக்கத் தமிழ் முன்னோர்கள் வழிவந்த இனப்பிள்ளைகளாகிய நாம், இன்றைக்கு ஒரு இக்கட்டான சூழலில் இருக்கக்கூடிய ஈழச் சொந்தங்களுக்கு, என் அன்பிற்குரிய உறவுகள் தங்களால் இயன்றதைப் பொருட்களாகவோ நிதியாகவோ வழங்கி, நம் இன மக்களின் துயரில் துணைநிற்க வேண்டுமாய் அன்போடும் உரிமையோடும் கேட்டுக்கொள்கிறேன்.

இதையும் படிங்க : G Square Case: ஜி ஸ்கொயர் வழக்கு அதிரடி மாற்றம்..விகடன்,சவுக்கு சங்கர்,மாரிதாஸ் விடுவிப்பு !

இதையும் படிங்க : 10 ஆண்டுகளாக பாலியல் தொல்லை..6 முறை கருக்கலைப்பு..லீக் ஆன வீடியோ - அதிரடி திருப்பம் !

Follow Us:
Download App:
  • android
  • ios