தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக எந்தப் பணிகளும் நடைபெறாது என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கேரள அரசு எச்சரித்துள்ளது.
மத்திய அரசின் தேசிய குடிமக்கள் பதிவேடு(என்.ஆர்.சி.), குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) ஆகியவற்றுக்கு எதிராக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில் தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்.பி.ஆர்.) ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை நடைபெறும், என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால், என்.பி.ஆர். பணிகளை மேற்கொள்ளப் போவதில்லை என கேரள, மேற்கு வங்க அரசுகள் அறிவித்துள்ளன.
இந்நிலையில் என்.பி.ஆர். பணிகளை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறுவுறுத்தியுள்ளது. அதிகாரிகள் பணிகளை மேற்கொள்ளாவிட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. ஆனால், ஏற்கனவே என்.பி.ஆர். பணிகள் கேரளாவில் நிறுத்தி வைக்கப்படும் என கேரள அரசு ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், அதில் மீண்டும் உறுதியுடன் இருப்பதை கேரள அரசு வெளிப்படுத்தியுள்ளது. 
கேரளாவில் என்.பி.ஆர்.தொடர்பான எந்த பணிகளும் நடைபெறாது என்பதை உறுதி செய்யுமாறு அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் மாநில அரசு சுற்றறிக்கை விடுத்துள்ளது. இதன்படி, கேரளாவின் பொது நிர்வாகத்துறை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், ‘தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக எந்தப் பணிகளும் நடைபெறாது என்பதை உறுதி செய்ய வேண்டும். மாநில அரசின் இந்த உத்தரவை மீறும் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தைத் தொடர்ந்து கேரள அரசும் என்.பி.ஆர். பணிகளை மேற்கொள்ள தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.